பெங்களூரில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு: பெங்களூரில் நேற்று ஒரே நாளில் 40 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பதறியடித்து வந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.நாடு முழுதும் பள்ளி, விமானம், பஸ், ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.இந்நிலையில் பெங்களூரின் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளி, செயின்ட் ஜெர்மன் அகாடமி, பெங்களூரு பள்ளி, பிஷப் காட்டன் ஆண்கள், பெண்கள் பள்ளி, தி இன்டர்நேஷனல் ஸ்கூல் பெங்களூரு, பால்ட்வின் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சோபியா உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட, தனியார் பள்ளிகளுக்கு நேற்று காலை ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.அதில், வணக்கம், பள்ளி வகுப்பறைகளில் பல இடங்களில் வெடிப்பொருட்கள் வைத்துள்ளேன். வெடிப்பொருட்கள் கருப்பு பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டு இருக்கும். உங்கள் அனைவரையும் இந்த பூமியில் இருந்து அனுப்பிவிடுவேன். யாரும் உயிர் பிழைக்க முடியாது. நீங்கள் உயிரிழந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, நான் மகிழ்ச்சியில் சிரிப்பேன். நீங்கள் இறந்த செய்தியை கேட்ட பின், கழுத்தை அறுத்து தற்கொலை செய்வேன். எனக்கு யாரும் உதவி செய்யவில்லை. என்னை போலவே நீங்களும் துன்பட தகுதியானவர்கள் என்று கூறப்பட்டு இருந்தது.அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளுக்கு போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விரைந்து சென்றனர். மோப்ப நாய் உதவியுடன் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டது.ஆனால் வெடிகுண்டோ, சந்தேகப்படும்படியான பொருளோ சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. இதற்கிடையில் பள்ளிகளுக்கு பதறியடித்து கொண்டு வந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மிரட்டல் வந்த roadkill333@atomicmail.io என்ற முகவரி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.