தமிழகத்தில் 4.31 லட்சம் பேர் எழுத்தறிவு பெறாதோர்; சிறப்பு திட்டத்தின் கீழ் கற்பிக்க முடிவு
கோவை: தமிழகத்தில், 15 வயதுக்கும் மேற்பட்ட கல்வி அறிவு பெறாதவர்களாக, 4 லட்சத்து 31 ஆயிரத்து 514 பேர் அடையாளம் காணப்பட்டதால், புதிய பாரத திட்டத்தில் கற்பித்தல் வகுப்பு, ஜூனில் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் முழு எழுத்தறிவு இலக்கை அடையும் வகையில், 2022ல் பாரத எழுத்தறிவுத் திட்டம் துவங்கப்பட்டது. இதில், 15 வயதுக்கும் மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு, ஐந்து மாத காலம் சிறப்பு வகுப்பு நடத்தப்படும்.எழுத்துகளை அடையாளம் காணுதல், எழுதுதல், பிழையின்றி எழுத்துக்கூட்டி வாசித்தல், வங்கி, ரயில்வே, தபால் சேவை விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல், எளிய கணக்குகளுக்கு தீர்வு காணுதல் போன்ற அடிப்படை எழுத்தறிவு பெறும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும்.வகுப்பின் நிறைவில் தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்படும். லடாக், கோவா, மிசோரம், திரிபுரா, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், தற்போது முழு எழுத்தறிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கடந்த 2022 - 26 என நான்கு ஆண்டுகளில், 30 லட்சம் பேர் எழுத்தறிவு பெற்று பயனடைந்துள்ளனர். அடுத்த ஆண்டிற்குள் முழு எழுத்தறிவு மாநிலமாக தமிழகத்தை கொண்டுவரும் நோக்கில், மாவட்ட வாரியாக, கல்வி அறிவு பெறாதோர் பட்டியல் திரட்டப்பட்டுள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு, அங்கன்வாடிகளில் பராமரிக்கப்படும் குடும்ப விபர பதிவேடு, நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்ட பதிவேடு, மகளிர் சுய உதவி குழு பதிவேடு அடிப்படையில், 4 லட்சத்து 31 ஆயிரத்து 514 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில், 3 லட்சத்து 45 ஆயிரத்து 84 பேர் பெண்கள், 132 பேர் மூன்றாம் பாலினத்தவர்.இவர்களுக்கு, 17 ஆயிரத்து 262 தன்னார்வலர்களால் வகுப்புகள் நடத்தப்படும். ஜூன் முதல்வாரத்தில் இருந்து அக்., மூன்றாம் வாரம் வரை, தினசரி மாலை இரண்டரை மணி நேரம் பாடம் சொல்லித்தரப்படும்.இத்திட்டத்தில் விடுபட்டவர்களை ஜூன் 15க்குள் சேர்க்க வேண்டும் என, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்ககத்தின் இயக்குனர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டில், முழு எழுத்தறிவு மாநிலமாக தமிழகத்தை தரம் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.எழுத்தறிவில் குமரி 'டாப்'அதிகபட்சமாக சேலத்தில், 25,023 பேரும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 996 பேரும் எழுத்தறிவு பெறாதவர்களாக உள்ளனர்.