நாட்டில் 50 சதவீத ஏழை குழந்தைகளுக்கு கல்வி இல்லை
அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று போடப்பட்ட சட்டத்தால் பலனில்லை; 50 சதவீத ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கவில்லை!அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும்; அதற்கு அரசு வழிவகுக்க வேண்டும் என்று பல ஆண்டுக்கு முன்பே கோரிக்கை எழுந்தது. 1988ல் கல்வி உரிமை கோரி தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்டது. சிறிய அளவில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆண்டுக்கு ஆண்டு பரவி, பல மாநிலங்களில் 15 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனர். கிராமம், கிராமமாக போய் குழந்தைகளுக்கு கல்வி முக்கியம். அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று பிரசாரம் செய்தும், பல காரணங்களால் போதுமான விழிப்புணர்வோ, சட்டத்தால் பலனோ இல்லை என்று இப்போது தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு இப்போது ஜன் அந்தோலன் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் பெங்களூரு நகரில், இதன் மாநாடு நடந்தது. கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்து மூன்றாண்டாகி விட்டது. அதனால் இன்னும் ஏழைக் குழந்தைகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என்று மாநாட்டில் பேசினர். இது குறித்து அமைப்பின் உறுப்பினர் ராஜேந்திர பிரபாகர் கூறுகையில், அனைவருக்கும் கல்வி கட்டாயம் கிடைக்க வேண்டும் என்று தான் அரசு இச்சட்டத்தை 2005ல் கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால், இன்று நிலை இன்னும் பரிதாபமாகத்தான் உள்ளது. மொத்தமுள்ள மக்கள் தொகையில் 50 சதவீத ஏழைக் குழந்தைகளுக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு அடிப்படை கல்விக் கூட தர முடியவில்லை. அரசு இந்த விஷயத்தில் தீவிர அக்கறை காட்டவில்லை என்பதால் தான் இப்படிப்பட்ட நிலை காணப்படுகிறது என்று தெரிவித்தார். இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதமாக கணக்கிடப்படுகிறது. இந்நிலையில், இளைஞர்களுக்கு போதுமான கல்வி கிடைக்காமல் இருந்தால் நாம் பெரிய அளவில் மனித வளத்தை இழக்க வேண்டியதிருக்கும் என்றும் மாநாட்டில் எச்சரிக்கை விடப்பட்டது. அமெரிக்காவில் உள்ள, பொது பள்ளி முறையை கொண்டு வர வேண்டும்; அப்போது தான் அனைவருக்கும், குறிப்பாக ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி தாராளமாக கிடைக்கும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.