காஞ்சியில் 57 மையங்களில் பிளஸ் 2 தேர்வு துவக்கம் மொழித்தேர்விலேயே 94 பேர் ஆப்சன்ட்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 57 தேர்வு மையங்களில், துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வில், 94 பேர் 'ஆப்சன்ட்' ஆகினர்.தமிழகம் முழுதும் பிளஸ் 2 தேர்வு நேற்று துவங்கியது. இம்மாதம் 26ம் தேதி வரை நடைபெறும் பிளஸ் 2 தேர்வுக்கான மொழித்தேர்வு நேற்று நடந்தது.தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், கல்வித்துறை, தேர்வுத்துறை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.முதல் நாள் பொதுத்தேர்வு என்பதால், தேர்வு எவ்வாறு எழுத வேண்டும்; மாணவ, மாணவியர் தேர்வு அறையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாவட்டத்தில் உள்ள 57 தேர்வு மையங்களிலும், முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர். இந்த தேர்வு மையங்களுக்கு, 57 முதன்மை காப்பாளர்கள், 80 பறக்கும் படையினர், பிளஸ் 2 தேர்வு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 107 பள்ளிகளைச் சேர்ந்த, 6,875 மாணவர்களும், 7,528 மாணவியர் என, 14,403 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகினர்.இதில் பள்ளி மாணவ, மாணவியர் 76 பேரும், தனித்தேர்வர்கள் 18 பேர் என, 94 பேர் நேற்று மொழித்தேர்வில் 'ஆப்சன்ட்' ஆகினர்.கலெக்டர் சினேகா, பெரிய காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவியர் அறைக்கு சென்று பார்வையிட்டார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 57 தேர்வு மையங்களில், அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது.அதில், 'பள்ளித் தேர்வர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் யாரும் தங்களுடன் மொபைல் போனை கண்டிப்பாக எடுத்துவரக் கூடாது. ஆள் மாறாட்டம், வினாத்தாள், விடைத்தாள் மாற்றம் போன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால், தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.தமிழ் பாடத்தில், 6 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிமையாக இருந்தன. சில வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்தாலும், அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்துள்ளேன். முதல் தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். இதே போல பிற தேர்வுகளும் எளிமையாக இருக்கும் என நம்புகிறேன். - டி.தமிழ்ச்செல்வன் பிளஸ் 2 மாணவர், அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாலாஜாபாத்.ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. நான் எதிர்பார்த்த வினாக்கள் அதிகளவில் வந்தன. தமிழ் மொழித்தேர்வு எளிமையாக இருந்தது. நன்றாக எழுதியுள்ளேன். மற்ற தேர்வுகளும் எளிமையாக இருக்கும் என நினைக்கிறேன். - மே. தர்ஷினி, பிளஸ் 2 மாணவி, எஸ்.எஸ்.கே.வி., மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.