10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால்..
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் கல்வி பயில அரசு நிதியுதவி செய்யவிருக்கிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆசியர் வெ. ஷோபனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு அவர்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் கல்வி பயில அரசு நிதியுதவி வழங்குகிறது. இதன்படி, இந்த அண்டு சென்னை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 3 மாணவர்கள், 3 மாணவியர்கள், மிகவும் பிற்பத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 2 மாணவர்கள், 2 மாணவியர்கள் என மொத்தம் 10 மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் பயில நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.28000க்கு மிகாமல், இரண்டாண்டுகளுக்கு ரூ.56,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. தகுதியுடைய மாணாக்கர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.