10 ஆண்டு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு
சென்னை: கடந்த 1998ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையான 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பள்ளி பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள், அரசு தேர்வுத் துறை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., பிளஸ் 2 ஆகிய பொதுத் தேர்வுகளின் போது வெளியிடப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் உடனடித் தேர்வு, தனித் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல்கள் ஆகிய அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுப் பணிகளில் சேர்பவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்குமாறு சம்பந்தபட்ட அரசுத் துறைகள், தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கும். அதுபோன்ற மனுக்கள் வரும்போது, சான்றிதழ்களை உடனுக்குடன் சரிபார்ப்பதற்கும், மதிப்பெண் பட்டியலை தொலைத்தவர்கள் மதிப்பெண் பட்டியல் நகல் கேட்டால் உடனடியாக வழங்குவதற்கும் கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யப்படும் பட்டியல்கள் பயன்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.