10ம் வகுப்பு - பிளஸ் 2 தேர்வு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 61 ஆயிரத்து 56 பேர் பொதுத்தேர்வுக்கு தயாராக உள்ளனர்.வரும், 2026ல் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், பொதுத்தேர்வை விரைந்து முடிக்க தேர்வுகள் துறை ஆயத்தமாகி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத தகுதியானவர்கள் முதல் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ. தேர்வுகள் பிப். 17 முதல் துவங்க உள்ளதாக, மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. நேற்று கல்வி அமைச்சர் மகேஷ், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் தேதி, அட்டவணை குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில் 2025 - 2026 கல்வியாண்டு, 16,155 மாணவர், 16 ஆயிரத்து 429 மாணவியர் என 32 ஆயிரத்து, 584 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையும், 13 ஆயிரத்து 28 மாணவர், 15 ஆயித்து 444 மாணவியர் என, 28 ஆயிரத்து 472 பேர் பிளஸ் 2 தேர்வையும் எதிர்கொள்ள உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம், 61 ஆயிரத்து 56 பேர் பொதுத்தேர்வுக்கு தயாராக உள்ளனர். நடப்பு 2025 - 2026 ம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத்தேர்வு இல்லை என சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.