10, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், பல்வேறு திட்டங்களின் துவக்க நிகழ்ச்சி, தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், மாற்றுத்திறன் மாணவர்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில், நலம் நாடி என்ற பெயரில், தனி இணையதளம்; அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் குறைகளை பெற, ஆன்லைன் தளம் துவங்கப்பட்டது.இவற்றைத் துவக்கி வைத்த பின், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி பொதுத்தேர்வுகள் நடக்கும். தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தேர்வு அட்டவணை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.எனவே, தேர்வு தேதியை தவிர்த்து, தமிழகத்துக்கான ஓட்டுப்பதிவு தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான கோரிக்கைகள், குறைதீர் மனுக்கள் இனி ஆன்லைன் வழியில் தீர்க்கப்படும். ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த தகவல், முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன், தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.