உள்ளூர் செய்திகள்

102 பேர் 200க்கு 200 கட் ஆஃப்

சென்னை: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 102 பேர், 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றனர். திருச்செந்துார் பள்ளி மாணவி நேத்ரா, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 446 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, &'ஆன்லைன் கவுன்சிலிங்&' நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, 1.88 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை, சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். உயர் கல்வித்துறை செயலர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் வினய், அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர் புருஷோத்தமன் உடனிருந்தனர்.இப்பட்டியலில் 102 பேர், 200க்கு 200 என்ற கட் ஆப் மதிப்பெண் பெற்று, முன்னிலையில் உள்ளனர். துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவி நேத்ரா, மாநில அளவில் முதலிடம் பெற்றார். தர்மபுரி ஜடையாம்பட்டி அவ்வை மெட்ரிக் பள்ளி மாணவி ஹரிணிகா இரண்டாம் இடமும்; திருச்சி வேங்கூர் செல்லம்மாள் மெட்ரிக் மகளிர் பள்ளி மாணவி ரோஷினி பானு, மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர் டாப்பர் பட்டியலில், சென்னை சைதாப்பேட்டை சீர்மிகு அரசு பள்ளியில் படித்த தர்மபுரி அன்னசாகரத்தைச் சேர்ந்த மாணவி மஹாலட்சுமி 200க்கு 200 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். நாகை கடிநெல்வயல் மாணவி நிவேதிதா 199.50 கட் ஆப் மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்; கோவை நெகமம் மாணவர் சரவணகுமார் 199 கட் ஆப் மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.தொழில் கல்வி பிரிவில், கோவை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆதித்யா, 199 கட் ஆப் மதிப்பெண்ணுடன், மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் எலைட் மெட்ரிக் பள்ளி மாணவர் ஷேன் ராய்ஸ்டன், 197.50 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம்; கோவை காரமடை எஸ்.ஆர்.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவி சுஜாஸ்ரீ, 195.50 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.அரசு பள்ளி மாணவர் தொழில் கல்வி பிரிவில், திருவண்ணாமலை ஒன்னுபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி வர்ஷினி மற்றும் மாணவர் ஹரி ராகவேந்திரா ஆகியோர் 185 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றுஉள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ரவிச்சந்திரன், 184 கட் ஆப் மதிப்பெண் பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். தரவரிசை பட்டியல் விபரம் அவரவர் பதிவு செய்துள்ள இ - மெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்