18,000 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்க அரசு திடீர் முடிவு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக அந்நாட்டில் குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், 18,000 இந்தியர்கள் உட்பட, 15 லட்சம் பேர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அடுத்த மாதம் 20ல் பதவியேற்க உள்ள நிலையில், அந்நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவர் என, டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.இதையடுத்து, அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை சார்பில், முறையான ஆவணங்கள் இன்றி தங்கள் நாட்டில் தங்கி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 லட்சம் பேர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியது தெரியவந்து உள்ளது.இதில், அமெரிக்காவின் அண்டை நாடுகளான மெக்சிகோ, எல் சால்வடார் ஆகியவற்றுக்கு அடுத்ததாக, நம் நாட்டில் இருந்து மட்டுமே, ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் முறைகேடாக குடியேறியதாக கூறப்படுகிறது.இதற்கான புள்ளி விபரங்களை, அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை கடந்த மாதம் வெளியிட்டது.இதன்படி, வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகபட்சமாக, அமெரிக்காவின் அண்டை நாடான ஹோண்ட்ராசை சேர்ந்த 2,61,651 பேர் உள்ளனர். இந்த பட்டியலில், 18,000 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.இவர்களை, அவரவர் சொந்த நாடுகளுக்கு தனி விமானம் வாயிலாக அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சில நாடுகள் ஒத்துழைக்காததால், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும், அமெரிக்க குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது.