234 தொகுதிகள் கல்வியகம் காமராஜர் பிறந்த நாளில் விஜய் துவக்கம்
சென்னை: காமராஜர் பிறந்த நாளன்று 234 சட்டசபை தொகுதிகளில் இரவு பாடசாலைகள் துவங்க, நடிகர் விஜய் மக்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளது.சென்னை பனையூரில் உள்ள வீட்டில், இரண்டாவது நாளாக, நேற்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன், நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தர்மபுரி என, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, 300க்கும் மேற்பட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார். வரும் 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளை ஒட்டி, 234 சட்டசபை தொகுதிகளில், இரவு பாடசாலை திட்டத்தை செயல்படுத்த, விஜய் முடிவு செய்துஉள்ளார். ஒரு தொகுதியில் குறைந்தபட்சம், நான்கு பாடசாலைகளை துவக்க அவர் திட்டமிட்டுள்ளார்.இது தொடர்பாக, மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களிடம், இரவு நேர பாடசாலை அமைப்பதற்கான இடம், வாடகை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, விஜய் ஆலோசனை வழங்கியுள்ளார். பள்ளி மாணவ - மாணவியருக்கு பாடம் சொல்லித் தர, தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்றும், நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியதாவது:தீவிர அரசியலில் நுழைவதற்கு முன், சமூக நலப் பணிகளுக்கு விஜய் முக்கியத்துவம் தருகிறார். குருதி கொடை, விழியகம் என்ற கண் தான திட்டம், விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் மதிய உணவு, குழந்தைகளுக்கு பால், முட்டை, ரொட்டி வழங்கி வருகிறோம். அடுத்ததாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்காக, பள்ளி மாணவர்களுக்கு இரவு நேர பாடசாலை திட்டத்தை துவக்குகிறோம்.இத்திட்டத்திற்கு படிப்பகம், பயிலகம், அறிவொளியகம், கல்வியகம் ஆகிய நான்கு பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் காமராஜர் பிறந்த தினத்தன்று, கல்வியகம் என்ற பெயரை, விஜய் சூட்டுவார் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.