30 சதவீத கட்டண உயர்வு அறிவிக்க மெட்ரிக் பள்ளிகள் கோரிக்கை
கடலூர்: “கல்வி கட்டணம் குறித்த விசாரணை தாமதமாகி வருவதால், 2010ம் ஆண்டு வசூலித்த தொகையுடன் இரண்டு ஆண்டுகளுக்கு 30 சதவீத கட்டண உயர்வு அளித்து அரசு இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும்” என, கடலூர் மாவட்ட மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. சங்க தலைவர் லட்சுமிகாந்தன் கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மெட்ரிக் பள்ளிகளில் மே மாதம் 10ம் தேதிக்குள் சேர்க்கைகள் முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளி துவங்க வேண்டும். இந்நிலையில் 2011-12ம் ஆண்டுக்கான கட்டண விவரத்தை தெரிவிக்காவிட்டால் பெற்றோர்களிடையே குழப்பம் ஏற்பட்டு, மாணவர்களின் கல்வி பாதிக்கும். எனவே 2009-10ம் ஆண்டில் மெட்ரிக் பள்ளிகளில் வசூலித்த கட்டணத்துடன் 2010-11ம் ஆண்டுக்கு கூடுதலாக 15 சதவீத கட்டண உயர்வும், 2011-12ம் ஆண்டுக்கு மேலும் கூடுதலாக 15 சதவீத கட்டண உயர்வும் அறிவித்து அரசு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு அரசே காரணம். இந்த பிரச்னையை தீர்த்து வைப்பது அரசின் கடமை. குழுவின் விசாரணையை துரிதப்படுத்தி நிரந்தர தீர்வு காண காலக்கெடு விதிக்க வேண்டியது அரசின் கடமையாகும். இவ்வாறு லட்சுமிகாந்தன் கூறினார்.