30ல் பி.இ., பி.டெக்., 2ம் ஆண்டு சேர்க்கை விண்ணப்பம்
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் அரசு, சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு, இந்த கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்காக விண்ணப்பங்கள், வரும் 30ம் தேதி முதல் அடுத்த மாதம் 23ம் தேதி வரை வினியோகிக்கப்படுகின்றன. சென்னை, கோவை, அரியலூர் உட்பட, மாவட்ட தலைநகரங்களில் உள்ள பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 23ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். இதற்கான கலந்தாய்வு, ஜூலை இரண்டாம் வாரத்தில், காரைக்குடியில் உள்ள அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.