36 படிப்புகளுக்கு இணை அங்கீகாரம்
சென்னை: நாட்டில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதற்கு மாணவர்களை தயார்படுத்தும்படி, மாநில பல்கலை, தனியார் நிகர்நிலை பல்கலை, தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், புதுப்புது படிப்புகளை அறிமுகப்படுத்துகின்றன.இந்த படிப்புகளை படித்தவர்கள், அரசு பணிகளில் சேரும்போது, அதற்கான பட்டியலில், இப்படிப்புகள் இடம்பெறுவதில்லை. இதனால் அவர்கள் அவதிக்கு ஆளாவதோடு, இப்படிப்புகளில் சேர தயக்கம் காட்டினர்.இதனால் இப்படிப்புகளை இணை படிப்புகளாக, அந்தந்த நேரங்களில் உயர்கல்வித்துறை அங்கீகரித்து அரசாணை வெளியிடுகிறது. உதாரணமாக, பி.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு இணையானது என கூறப்பட்டுள்ளது.அதன்படி தற்போது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைகளில் வழங்கப்-படும், 36 படிப்புகளுக்கு இணையான அங்கீகாரம் வழங்கி, சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.