இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை அடக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது
அரூர்: ''இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை, அழைத்து பேசி, முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக, காவல்துறை கொண்டு அடக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது,'' என, மா-.கம்யூ., கட்சி மாநில செயலாளர் சண்முகம் பேசினார்.தர்மபுரி மாவட்டம், அரூரில், தொழிற்பேட்டை, வேளாண் கல்லுாரி, மொரப்பூர் - தர்மபுரி ரயில் இணைப்பு, நீர்மேலாண்மை, வீட்டுமனை பட்டா கோரி, மா.கம்யூ., சார்பில், அரூர் சட்டசபை தொகுதி மக்கள் கோரிக்கை மாநாடு, அரூர் கச்சேரிமேட்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் சிசுபாலன் தலைமை வகித்தார். அரூர் ஒன்றிய செயலாளர் குமார் வரவேற்றார். கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது:கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வது வீண் செலவு அல்ல. கடந்த, 4 நாட்களாக பெண்கள் உள்ளிட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், கடந்த, 15 ஆண்டுகளாக சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு போராடி வருகின்றனர்.சம வேலைக்கு, சம ஊதியம் என்பது, தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதி, இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை, அழைத்து பேசி, முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக, காவல்துறை கொண்டு அடக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது. உரிய காலத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றததால், போராட்டத்திற்கு ஆசிரியர் தள்ளப்பட்டுள்ளனர்.சமீபத்தில், 7 நாட்கள் செவிலியர் போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையின் அணுகுமுறை ஏற்கத்தக்கது அல்ல. காவல்துறை, வருவாய்த்துறை, அரசு அதிகாரிகளில் ஒரு பிரிவினர், தி.மு.க., ஆட்சிக்கு எதிராக இருப்பார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.வரும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., உள்ளிட்ட எல்லா கட்சிகளும் விருப்ப மனு வாங்குகின்றன. வலுவாக இருக்கும், தி.மு.க., இன்னும் விருப்ப மனு வாங்கவில்லை.தப்பித்தவறி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், இ.பி.எஸ்., முதல்வராக இருக்க முடியாது. அ.தி.மு.க., என்ற கட்சியே தமிழகத்தில் இருக்காது. ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வினர் அழித்து குழிதோண்டி புதைத்து விடுவர். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டி வளர்த்த, அ.தி.மு.க., என்ற கட்சி, இ.பி.எஸ்., காலத்தில் அழிந்து விட்டது என்ற நிலைதான் ஏற்படும்.சமீபத்தில் கேரளாவில், உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஒரு நகராட்சியில், 10 இடங்களில் இடதுசாரிகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள், 4 இடங்களில் மட்டுமே, பா.ஜ., வெற்றி பெற்றது. மீதி, 8 இடங்களில், காங்., வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அங்கு நகராட்சி தலைவர், பா.ஜ.,வை சேர்ந்தவர். காங்., கவுன்சிலர்கள், 8 பேரை விலைக்கு வாங்கி, தலைவராகி விட்டனர். எனவே, தமிழகத்தில், பா.ஜ., சதி திட்டத்தை முறியடித்து, தி.மு.க., தலைமையிலான கூட்டணி ஒற்றுமையாக இருந்து, மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.