மாணவர் மனசு பெட்டியில் புகார் அளிக்க விழிப்புணர்வு
மேட்டுப்பாளையம்: காரமடையில், 'மாணவர் மனசு' பெட்டியில் புகார் அளிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.காரமடை கல்வி வட்டாரத்தில் 144 அரசு பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தங்களது பிரச்னைகளை புகார் அளிக்க 'மாணவர் மனசு' என்னும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.புகார் கடிதத்தை கண்காணிக்க தலைமை ஆசிரியர் தலைமையில், மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அந்தந்த பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 'மாணவர் மனசு' பெட்டியில் விழும் புகார்களை நிவர்த்தி செய்து தீர்வு காணுகின்றனர். மாணவ, மாணவிகள் புகார் அளிப்பது எப்படி என்பது குறித்து அவர்களுக்கு விழிப்புணர் வும் ஏற்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, காரமடை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் கூறியதாவது:-பாலியல் தொடர்பான குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும், அவ்வாறு நடந்தால் புகார் அளிப்பது தொடர்பாகவும், குட் டச், பேட் டச் போன்றவைகளை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.புகார் பெட்டியில் பள்ளியின் தூய்மை, குடிநீர் பிரச்னை போன்ற வகுப்பறை சார்ந்த புகார்கள் தான் பெருமளவில் இடம்பெறுகின்றன. மேலும், காலை மற்றும் மதிய உணவு திட்டத்தில் உணவுகளில் குறை இருந்தாலும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.