உள்ளூர் செய்திகள்

390 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், 390 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன.சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர்கள் மகேஷ், சுப்ரமணியன், சேகர்பாபு ஆகியோர், விருது, வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். பள்ளிக்கல்வி, 170; தொடக்க கல்வி, 169; தனியார் பள்ளிகள், 37; ஆங்கிலோ இந்தியன் பள்ளி, மாற்றுத்திறனாளிகள் தலா, இருவர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 10 என, 390 ஆசிரியர்கள், விருதுகளை பெற்றனர். பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா, இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் மகேஷ் பேசியதாவது:ஆசிரியர் சங்கத்தினரிடம் 20 மணி நேரம் அமர்ந்து குறைகளை கேட்டுள்ளோம். அதில் முக்கியமான ஐந்து கோரிக்கைகளை விரைவில் அரசு நிறைவேற்ற உள்ளது. ஆசிரியர்கள் எமிஸ் என்ற இணையதள டேட்டா பதிவுக்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. அதனால் பாடம் நடத்த நேரம் இல்லை என்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறோம். இனி டேட்டா என்ட்ரி வேலை இருக்காது. மாணவர், ஆசிரியர் வருகைப்பதிவை மட்டும் ஆன்லைனில் பதிவிட்டால் போதும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்