அனிமேஷன் துறைக்கு புதிய கொள்கை அமைச்சர் தியாகராஜன் தகவல்
சென்னை: “தமிழகத்தில் அனிமேஷன், காமிக்ஸ், காட்சி விளைவுகள் துறைக்கு, புதிய கொள்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது,” என, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.'அனிமேஷன், காமிக்ஸ், கிராபிக்ஸ்' அடிப்படையிலான விளையாட்டுகள், 'கேமிங்' என குறிப்பிடப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் ஈர்க்கும் இத்துறையில், தொழில் முறையில், 'கேம் டெவலப்பர்களாக' அதிகமானோர் ஈடுபடுகின்றனர்.பொருளாதார மதிப்பு இந்நிலையில், 'இந்திய கேம் டெவலப்பர்ஸ் சங்கம்' சார்பில், 'கேம் டெவலப்பர்ஸ்' 17வது மாநாடு சென்னையில் நேற்று துவங்கியது. 'இந்தியா கேமிங் விஷன் - 2035' என்ற அறிக்கை இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது.இதில், 'கேமிங்' துறையில் உலகளாவிய வரிசையில் இந்தியா முன்னேறவும், 2035ம் ஆண்டிற்குள், 8.60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இத்துறையின் பொருளாதார மதிப்பு உயரவும், 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்கான செயல் திட்டங்கள், இடம் பெற்று உள்ளன.புதிய அடித்தளம் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:தமிழக அரசு அனிமேஷன், காமிக்ஸ், காட்சி விளைவுகள் ஆகிய துறைகளுக்கான புதிய கொள்கையை இறுதி செய்து வருகிறது. இது, தமிழகத்தில் படைப்பு தொழில் முனைவோருக்கான புதிய அடித்தளமாக அமையும்.'கேமிங் மற்றும் இன்ட்ராக்டிவ் மீடியா' எனும் விளையாட்டு மற்றும் விவாத ஊடகங்கள் என்பவை, வெறும் பொழுதுபோக்கின் வடிவங்கள் மட்டுமல்ல; அவை கலாசார வெளிப்பாடாகவும் இருந்து வருகின்றன.இதனால், இளைஞர்களின் ஈடுபாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் ஆற்றல் வாய்ந்த உந்துசக்திகள் என்பதை உணர முடிகிறது. இது போன்ற தொழில்துறை அமைப்புகளுடன், அரசு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.இதில், ஜி.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய கேம் டெவலப்பர்ஸ் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர் முப்பிடி கூறுகையில், “இத்துறையில் தொழில்துறையினர் மாநில மற்றும் மத்திய நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பணியை, எங்கள் அமைப்பு செய்து வருகிறது,” என்றார்.