நீட் தேர்வில் அன்னுார் மாணவர் தேசிய அளவில் 9ம் இடம்
அன்னுார்: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வில் அன்னுாரைச் சேர்ந்த பரத்குமார் தேசிய அளவில் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார்.முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தேர்வு கடந்த ஆக. 3ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 55 ஆயிரத்து 842 மருத்துவ இடங்களுக்கு, 2 லட்சத்து 30 ஆயிரத்து 114 பேர் தேர்வு எழுதினர்.இதில் அன்னுாரைச் சேர்ந்த டாக்டர் பரத்குமார், 25. 800 மதிப்பெண்களுக்கு 691 பெற்று அகில இந்திய அளவில் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் 707 ஆக உள்ளது.பரத்குமார் மருத்துவ பட்டப் படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் கடந்தாண்டு பட்டப் படிப்பை முடித்தார். இந்நிலையில் முதுநிலை மருத்துவ பட்ட படிப்புக்கான நீட் தேர்வில் அகில இந்திய அளவில் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார்.இவரது தந்தை கோவிந்த சாமி. சுகாதாரத் துறையில் அன்னுார் வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். இவரது தாயார் கவிதா பொகலூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார்.இந்த மாத இறுதியில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் ஆன்லைனில் நடைபெற உள்ளது. மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் சேர உள்ளதாக பரத் தெரிவித்தார். சாதித்த பரத்குமாருக்கு அன்னுார் வட்டார சுகாதாரத் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.