சோலாராஸ் செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது!
பெங்களூருவை சேர்ந்த 'கிரஹா ஸ்பேஸ்' நிறுவனத்தின் “சோலாராஸ்” நானோ செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட்டின் 'விக்ரம்-1' ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்வெளிக்கு பயணமாகிறது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து, நாளை (ஜூலை 18) காலை 11:30 மணிக்கு இந்த ஏவுதல் நிகழ்வு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.'சோலாராஸ்' என்ற இந்த சோதனை நானோ செயற்கைக்கோள், விண்ணில் செலுத்தப்படுவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து அதிர்வு மற்றும் தொழில்நுட்ப சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்து தகுதிச் சான்று பெற்றுள்ளது. இதையடுத்து, விக்ரம்-1 ராக்கெட்டின் மேல்நிலைப் பகுதியில் இந்த செயற்கைக்கோள் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது. தற்போது ராக்கெட் ஏவுதளத்திற்கு கொண்டு வரப்பட்டு, ஏவுதலுக்கான கவுண்ட்டவுன் மற்றும் இறுதிச் சரிபார்ப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.மேலும், பூமியின் தாழ் வட்டப்பாதையில் இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்துவதன் மூலம், கிரஹா ஸ்பேஸ் நிறுவனம் தனது அதிநவீன தொழில்நுட்பத் திறனை நிரூபிக்க உள்ளது. உள்நாட்டு தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பில் சென்னை மற்றும் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்திற்கு இந்த ஏவுதல் ஒரு மிக முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.