உள்ளூர் செய்திகள்

4 நாள் விடுமுறை... தீபாவளியை கொண்டாட தி.மு.க., அரசு சலுகை: வியாழன் முதல் ஞாயிறு வரை உற்சாகம் தான்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தீபாவளியை குதுாகலமாகக் கொண்டாட, தி.மு.க., அரசு சிறப்பு சலுகை அளித்துள்ளது. வேலை நாளாக இருந்த நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்து, வியாழன் முதல் ஞாயிறு வரை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்க, அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனால், அனைத்து தரப்பினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள், வார இறுதி நாளுக்கு முன் வந்தால், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை சேர்த்து கொண்டாடும் வகையில், இடைப்பட்ட நாட்களுக்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கமாகி வருகிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.அன்று, வழக்கம் போல அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் வெள்ளிக்கிழமை வேலை நாள். அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள். எனவே, தீபாவளிக்கு அடுத்த நாள் வரும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.இது, தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்கு, பண்டிகையை சிறப்பாக கொண்டாடி விட்டு, ஊர் திரும்ப வசதியாக இருக்கும்.எனவே, தீபாவளிக்கு மறுநாள், நவம்பர் 1ம் தேதியன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம் உட்பட பல்வேறு அமைப்புகள், முதல்வருக்கு கோரிக்கை விடுத்தன.அதை ஏற்று, தி.மு.க., அரசு, நவ., 1 மட்டும், தமிழகம் முழுதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டு உள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 9ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் வைத்து, இவ்விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதற்கு, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.புதுச்சேரி மாநில அரசு, தீபாவளிக்கு முந்தைய நாளான புதன் கிழமையும் விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இது, அம்மாநில மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்