உள்ளூர் செய்திகள்

4 ஆயிரம் பேர் எழுதிய உதவி தொகைக்கான சிறப்பு தேர்வு

திருப்பூர்: திருப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், கல்வி சிறப்பு உதவி தொகை பெறுவதற்கான தேர்வு நடந்தது; 4 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதினர். தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவி தொகை வழங்கும் திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவியருக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 உதவி தொகை பெறலாம். தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு இந்த சிறப்பு உதவி தொகை வழங்கப்படும். திருப்பூர் கல்வி மாவட்டத்தில் சிறப்பு உதவி தொகை பெற 4,064 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். திருப்பூரில் உள்ள கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 501 பேர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 456 பேர், ஜெய்வாபாய் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 415 பேர், பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் 463 பேர் என திருப்பூரில் மட்டும் 1,835 பேர் தேர்வு எழுதினர். அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 450 பேர், அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 367 பேர், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 392 பேர், சூலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 541 பேர், பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 479 பேர் தேர்வு எழுதினர். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன; கம்ப்யூட்டர் வினாத்தாளில் மாணவ, மாணவியர் பதில் அளித்தனர். சிறப்பு தேர்வை கண்காணிக்க 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்களாக செயல்பட்டனர். மாவட்ட கல்வி அலுவலர் கார்த்தியாயினி, தேர்வு மைய பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டார். தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அடிப்படையில், உதவி தொகை பெற தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்