உள்ளூர் செய்திகள்

435 டிரி-வேலி இந்திய மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ப்பு

டிரி-வேலி பல்கலையில் படித்து வந்த 435 இந்திய மாணவர்களுக்கு வேறு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை கிடைத்துள்ளது. கடந்த கல்வியாண்டில் விசா முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் டிரி-வேலி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 1,800 இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகளிடம், அமெரிக்க அதிகாரிகள் அளித்த அறிக்கையில், டிரி-வேலி பல்கலையில் படித்த மாணவர்களில் பலருக்கு கலிபோர்னிய பல்கலைக்கழகங்களில் சேர்க்கை கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும், 145 இந்திய மாணவர்கள், கல்வி நிறுவன மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் சில மாணவர்களின் மாற்றம் இன்னும் பரிசோதனையில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. டிரி-வேலி பல்கலையில் படித்து வந்த மாணவர்களிடம் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு அவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களும், விவரங்களும் உண்மையானவையா என்பது தெரிந்த பிறகு அவர்களுக்கு மற்றொரு கல்வி நிறுவனத்தில் சேர்க்கை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிகாரிகளின் இந்த சீரிய நடவடிக்கை இந்திய தூதரகத்திற்கு திருப்தியை அளித்துள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது. விசா முறைகேடுகளில் ஈடுபட்டு அங்கீகரிக்கப்பட்டதை விட ஏராளமான வெளிநாட்டு மாணவர்களை டிரி-வேலி பல்கலைக்கழகம் சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்