உள்ளூர் செய்திகள்

50 ஆயிரம் பெற்றோருக்கு கடிதம்

புதுச்சேரி: தவறாமல் ஓட்டளிக்க வலியுறுத்தி 50 ஆயிரம் பெற்றோருக்கு வேண்டுகோள் கடிதங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் அனுப்பப்பட்டது.புதுச்சேரி லோக்சபா தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில் வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் திட்டத்தின்கீழ், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, நகரப் பகுதியில் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, லோக்சபா தேர்தலில் தவறாது ஓட்டளிக்க வேண்டி, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தனிப்பட்ட கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், தனது பெயரில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள தனிப்பட்ட வேண்டுகோள் கடிதங்களை, நகரப் பகுதிகளில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கி, அதனை, பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மூலம் அவர்களது பெற்றோர்களிடம் தவறாது சேர்த்திட கேட்டுக் கொண்டார்.அதன்படி, 50,000 பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது. நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பொம்மலாட்ட காணொலிகள், உயர்நிலைப்பள்ளி முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.இக்காணொலிகளை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார். சப் கலெக்டர் யஷ்வந்த் மீனா, துணைத் தேர்தல் அதிகாரி வினயராஜ், ஸ்வீப் நோடல் அதிகாரி செழியன்பாபு, 25 உயர் நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்