55 வயது மாணவரின் சட்ட போராட்டம் வெற்றி!
புதுடில்லி: அரியானாவைச் சேர்ந்த விஞ்ஞானியை இதழியல் வகுப்பில் மாணவராக சேர்த்துக் கொள்ளும்படி, டில்லி பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரியானாவைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஹர்பல் சிங் (55). இவர் இந்திய விவசாய ஆராய்ச்சி மையம் மூலமாகவும், மாஸ்கோ ஸ்டேட் பல்கலை மூலமாகவும் ஆராய்ச்சி பட்டங்கள் பெற்றவர். இருந்தாலும், இவரது கல்வி வேட்கை தணியவில்லை. இதழியல் குறித்து படிக்க விரும்பினார். இதற்காக, கடந்தாண்டு டில்லி பல்கலையில் விண்ணப்பித்தார். நுழைவுத் தேர்விலும் வெற்றி பெற்றார். ஆனால், வகுப்பில் சேர்வதற்கு ஹர்பல் சிங்கிற்கு பல்கலை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. விரக்தி அடைந்த ஹர்பல் சிங், டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘எந்தவித காரணமும் இன்றி எனக்கு படிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், ‘ஹர்பல் சிங்கை உடனடியாக இதழியல் வகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என டில்லி பல்கலைக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து ஹர்பல் சிங் கூறுகையில், ‘சில ஆண்டுகளுக்கு முன் டில்லி பல்கலையில் உக்ரைன் ஆய்வு குறித்து படித்தேன். அப்போது மற்ற மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டேன். இதை மனதில் வைத்தே, இதழியல் பிரிவில் படிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது கோர்ட் உத்தரவை அடுத்து, எனக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வந்துள்ளது. என் இதழியல் படிப்பு குறித்த கனவு நிறைவேறும் நேரம் வந்து விட்டது’ என்றார்.