6 புதிய பொறியியல் கல்லூரிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் திண்டிவனம் மற்றும் விழுப்புரத்திலும், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் பண்ருட்டி, அரியலுவர், திருக்குவளை, ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் இந்த ஆண்டு முதல் புதிதாக ஆரம்பிக்கப்படும் பல்கலைக்கழக கல்லூரிகளை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு சைதாப்பேட்டையில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் புதிய வளாகத்திற்கும், தமிழ் நாடு மாநில உயர் கல்வி மன்றத்திற்கு 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் புதிய கட்டடத்திற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருதை காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிக்கும், சிறந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கான விருதை வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கும், சிறந்த கலை, அறிவியல் கல்லூரிக்கான விருதை சென்னை மாநிலக் கல்லூரிக்கும் முதல்வர் வழங்கினார். சிறந்த கல்வியாளர்களுக்கான விருதை ஆறு பேருக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை 10 பேருக்கும் அவர் வழங்கினார். தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்றத்தால் வெளியிடப்படும், 16 நூல்களையும் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, நிகழ்ச்சிக்கு வர இயலுமா? என்பது கேள்விக்குறியாகியது. கண்ணெதிரே அண்ணா பல்கலைக்கழகமும், அதில் கலந்துகொள்ளும் மாணவர்களும் தென்பட்டதால், உங்களிடம் காட்டும் அன்பு போலியானது அல்ல, உண்மையானது என்பதை நிலைநாட்டும் வகையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன். இங்கு பேசியவர்கள் என்னை துரோணர், பீஷ்மர் என வர்ணித்து, அவர்களது கோபத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். நான் பீஷ்மரை மதிப்பவன் தான். பாண்டவர்களுக்காக வாதாடிக்கொண்டிருந்த பீஷ்மர் இறுதிக்கட்டத்தில் துரியோதனாதிகளுக்காக வாதாடி அவர்களுக்காக களத்திலே அடிபட்டு, அம்புப்படுக்கையிலே படுத்து, பிறகு மாண்டார். அவரது தொடக்க காலத்து கதையை படித்திருக்கிறேன். சொல்ல விரும்பவில்லை. அடித்தட்டு மக்களுக்கு ஜாதி, வகுப்பு, மதத்தின் பெயரால், உயர்ந்தோர் தாழ்ந்தவர் என்ற பெயரால் கல்வி மறுக்கப்பட்ட காலம் துரோணரின் காலம். வில் வித்தை கற்றுக்கொண்ட ஏகலைவனிடம் துரோணர், கட்டை விரலை குருகாணிக்கையாகப் பெற்றார். கட்டை விரல் இல்லாமல், வில்லில் அம்பை வைத்து குறிபார்க்க முடியாது. உயர்ந்த குலத்தைச் சேர்ந்த தன்னிடம், தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் வித்தை கற்றுக்கொள்ளக் கூடாது என்ற மதவெறி, ஜாதிவெறி, ஆதிக்க வெறியின் காரணமாக ஏகலைவன் என்ற சிறுவனுக்கு வித்தை மறுக்கப்பட்டது; கல்வி மறுக்கப்பட்டது. அப்படி கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த மாணவ சிங்கங்கள் தான் நீங்கள். காமராஜர் கிராமப்புற மக்களுக்கு கல்வி, படிப்பு வேண்டும் என அரும்பாடுபட்டது ஆரம்ப கட்டம். கல்வி பயில்பவர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 50 ஆயிரமாக இருந்தது, இந்த ஆண்டு ஒரு லட்சம்; கடந்த ஆண்டு 20 ஆயிரமாக இருந்தது, இந்த ஆண்டு 50 ஆயிரம் என பெருமைகளைச் சொல்கிறோம். உரிய கல்வியைத் தர காமராஜர் வழிவகுத்தார். இன்று, உயர்க்கல்வியும் பெற்றுக்கொள் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இந்தத் தொகை பெருகுமேயானால், எதிர்காலம் தமிழகத்தில் பூங்காவனமாக, பூந்தோட்டமாக ஆகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் கருணாநிதி. உயர்க்கல்வித் துறைச் செயலர் கணேசன் வரவேற்றார். உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையுரையாற்றினார். தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்ற துணைத்தலைவர் ராமசாமி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பழனிச்சாமி, கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் காளியப்பன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகர் நன்றி கூறினார்.