உள்ளூர் செய்திகள்

9 லட்சம் மாணவர்களுக்கு குடல்புழு நீக்கும் மாத்திரை

சென்னை : ரத்தசோகை போக்கி, சுறுசுறுப்பை ஏற்படுத்தும் வகையில், சென்னையில், ஒன்பது லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஒரே நாளில், குடல்புழு நீக்கும் மாத்திரைகளை வழங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வயிற்றில் உருவாகும் புழுவால், வயிற்று வலி, வயிற்றுப்புண், மலத்துடன் ரத்தம் கசிதல், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படும். இதன் பாதிப்புள்ளோருக்கு, மூளை வளர்ச்சி தடைபடுவதால், செயல்திறனும் குறைந்து விடுகிறது. சென்னையில் உள்ள மாணவ, மாணவியருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டால், கல்வித்திறன் குறைந்து விடக்கூடும் என்பதால், குடல்புழு நீக்கும் வகையில், ஆல்பெண்டசோன் மாத்திரைகளை, மாநகராட்சி வழங்க உள்ளது. இன்னும் பத்து நாட்களில் மாத்திரை வழங்கும் வகையில், மாநகராட்சி சுகாதாரத்துறை அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில், ஒரு லட்சம் மாணவர்கள், அரசுப்பள்ளிகளில் 1.5 லட்சம், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2.5 லட்சம், தனியார் பள்ளிகளில் இரண்டு லட்சம் பேர் என, ஏழு லட்சம் பேர் மற்றும் சென்னையில் புதிதாக இணைந்த பகுதிகளில் இரண்டு லட்சம் பேர் என, ஒன்பது லட்சம் மாணவ, மாணவியரக்கு, இந்த மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானந்தன் கூறும்போது, "மாநகராட்சி மாணவர்களின் நலன் கருதி, மாநகராட்சி, ஆண்டுதோறும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த கல்வியாண்டில், முதற்கட்டமாக, இன்னும் பத்து நாட்களில், மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. மாத்திரைகள் வந்ததும், ஒரே நாளில் அனைத்து பள்ளிகளுக்கும், மாத்திரைகள் வழங்கப்படும். அடுத்த கட்டமாக, பிப்ரவரி மாத இறுதியில், வழங்கப்படும். இதன் மூலம், மாணவர்கள் ரத்தசோகை நீங்கி, சுறுசுறுப்புடன் செயல்படுவர் என்பதால், அவர்களின் செயல்திறன் மேம்படும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்