புதுடில்லி: கேரள காங்கிரஸ் தலைவர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிமி ரோஸ் பெல் ஜான், இந்த விவகாரம் குறித்து சோனியாவை சந்தித்து நீதி கேட்க போவதாக தெரிவித்துள்ளார்.கேரள திரையுலகை சேர்ந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றச்சாட்டு
இந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், கேரள காங்.,கைச் சேர்ந்த பெண் பிரமுகர் சிமி ரோஸ் பெல் ஜான், பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.கேரள காங்கிரஸ் கட்சியில், மூத்த தலைவர்களுக்கு நெருக்கமாக உள்ள பெண்களுக்கு மட்டுமே கட்சியில் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இது, கட்சியில் உள்ள லட்சக்கணக்கான பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதமாக உள்ளதாக தெரிவித்த கேரள காங்., தலைமை, சிமியை கட்சியில் இருந்து நேற்று முன்தினம் நீக்கியது.மேலும், காங்கிரசின் அரசியல் எதிரிகளுடன் சிமிக்கு தொடர்பு இருப்பதாகவும், அதன் காரணமாகவே பொய் குற்றச்சாட்டை கூறுவதாகவும் காங்., தலைவர்கள் தெரிவித்தனர். இரட்டை வேடம்
இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் ராஜிவ் சந்திரசேகர் கூறுகையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக குரல் கொடுப்பதில் முன்னாள் தலைவர்கள் சோனியாவும், ராகுலும் இரட்டை வேடம் போடுகின்றனர். ''கேரள காங்.,கைச் சேர்ந்த பெண் கூறியுள்ள பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தாமல் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது வெட்ககேடானது,” என்றார்.சிமி ரோஸ் கூறுகையில், “இந்த மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன். தொடர்ந்து போராடுவேன். இந்த விவகாரம் குறித்து, சோனியாவை சந்தித்து நீதி கேட்பேன்,” என, நேற்று தெரிவித்தார்.