உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பழனி மாவட்டத்துடன் சேர அடுத்தடுத்து எழும் எதிர்ப்பு

பழனி மாவட்டத்துடன் சேர அடுத்தடுத்து எழும் எதிர்ப்பு

கொடைக்கானல் : புதிதாக உருவாக உள்ள பழனி மாவட்டத்துடன் இணைய உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் வசிப்போர் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை பழனியுடன் இணைக்க, அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக, புதிதாக பழனி மாவட்டம் உருவாக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். தொடர்ந்து, பழனி சப் - கலெக்டரிடம் எல்லை குறித்து அறிக்கை கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதில், ஒட்டன்சத்திரம், பழனி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை சட்டசபை தொகுதிகளை பழனி மாவட்டத்துடன் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. பழனி தொகுதியில், கொடைக்கானல் வருகிறது. ஆனால், மாவட்ட நிர்வாகம் எனும் போது, பழனி மாவட்டத்துடன் கொடைக்கானலை இணைத்தால், மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும்; பஸ் போக்குவரத்து, நிர்வாகம் என, பல பிரச்னைகள் ஏற்படும். திண்டுக்கல் மாவட்டத்துடன், கொடைக்கானல் தாலுகா இணைந்திருப்பதே தங்களுக்கு வசதியானது என, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.கொடைக்கானலில் உள்ள பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் இந்த பிரச்னையை உள்ளூர் வாட்ஸாப் குழுக்கள் வாயிலாக பரப்பி வருகின்றனர்.ஏற்கெனவே, பழனி புதிய மாவட்டத்துடன் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவை இணைக்க எதிர்ப்பு கிளம்பியது. கோவை மண்டலத்தில் உள்ள, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை, மடத்துக்குளம், உடுமலை தாலுகாவை உள்ளடக்கி புதிய மாவட்டத்தை உருவாக்கினால் சிறப்பானதாக இருக்கும் என, கருத்து தெரிவித்தனர்.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள திருமூர்த்தி, அமராவதி அணை நீரை ஒட்டன்சத்திரத்துக்கு கொண்டு செல்ல, அமைச்சர் சக்ரபாணி திட்டமிட்டது நடைபெறாமல் போனதால், இப்பகுதியை பழனி மாவட்டத்துடன் சேர்த்து, தண்ணீர் கொண்டு செல்ல உள்நோக்கத்துடன் ஆளுங்கட்சி தரப்பு முயற்சிக்கிறது. இதை கைவிட வேண்டுமென, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன விவசாயிகள் மனு அனுப்பினர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி, உடுமலை, மடத்துக்குளம், வியாபாரிகள் சங்கம், இந்திய விவசாயிகள் சங்கம், தொழில்அமைப்புகள், உடுமலை, மடத்துக்குளம் பாதுகாப்பு பேரவை, பா.ஜ., கட்சியினர் மனு அனுப்பி கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்தனர்.பழனி புதிய மாவட்டத்துடன் இணைய அடுத்தடுத்து எழும் எதிர்ப்புகளால், அது குறித்த பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் குழப்பம்அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாரதி
மார் 11, 2025 22:02

மக்களாட்சி என்றால் என்ன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் வேடிக்கை பார்க்க வேண்டும் என்று தான் நம்முடைய அநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது...


naranam
மார் 11, 2025 06:34

வேலூரிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லாதே. பவானியிலுருந்து தண்ணீர் கொண்டு செல்லாதே. என் சக தமிழர்களுக்கு தண்ணீர் கிடைக்காவிட்டாலும் கவலை இல்லை. சபாஷ்.. தமிழனென்று சொல்லடா தலை குனிந்து நில்லடா.. இந்த லட்சணத்தில் அண்டை மாநிலங்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?


சமீபத்திய செய்தி