உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கேள்விக்குறியாகும் நர்சுகள் வாழ்வாதாரம்

கேள்விக்குறியாகும் நர்சுகள் வாழ்வாதாரம்

கோவை: கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிய, மருத்துவ பணியாளர் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று, 12,000த்திற்கும் மேற்பட்ட நர்சுகள், பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில், 6,000த்துக்கும் மேற்பட்ட நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்படாமல், குறைந்த சம்பளத்தில் தற்காலிக பணியாளர்களாகவே உள்ளனர். குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை கவனிக்க முடியாமல், கடும் மனவேதனையில் இருந்து வருகின்றனர்.நர்சுகள் சிலர் கூறியதாவது:மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வாகி, 12,000த்துக்கு மேற்பட்ட நர்சுகள் பணிபுரிந்து வருகிறோம். கிட்டத்தட்ட, 6,000த்துக்கும் மேற்பட்ட நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். தேர்வு எழுதி பணியில் சேர்ந்த ஈராண்டுகள் கழித்து, பணி நிரந்தரம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். ஆனால், 2015ம் ஆண்டு பணியில் சேர்ந்த சிலருக்கே, இப்போது தான் பணி நிரந்தரத்துக்கான ஆணை வந்துள்ளது.

குறைந்த சம்பளம்

இதே நிலை நீடித்தால், பணி நிரந்தர ஆணை வருவதற்குள் சிலர் ஓய்வு பெற்று விடுவர். மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, ஈராண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த டாக்டர்கள், லேப் டெக்னீஷியன்கள், மருந்தாளுனர்கள் பணி நிரந்தரம் பெற்று விட்டனர்.நாங்கள், 7,000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து தற்போது தான், 18,000 ரூபாய் சம்பளத்திற்கு வந்துள்ளோம். குறைந்த சம்பளம் என்றாலும் நாங்கள், நிரந்தர பணியில் உள்ள நர்சுகளுக்கு இணையாக வேலை செய்து வருகிறோம். நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும், 44,000 ரூபாய் சம்பளத்தை விட குறைவாக தந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார். ஆனால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

வாக்குறுதி என்னாச்சு?

ஆண்டுதோறும், 5 சதவீதம் அல்லது 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்குவதாக தெரிவித்தனர். அதுவும்இதுவரை கிடைக்கவில்லை. இது குறித்து கோரிக்கை வைத்தால், காலி பணியிடங்கள் இல்லை என்றும், நிதி பற்றாக்குறை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். காலிப்பணியிடங்கள் நிறைய உள்ளன.ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு நிரந்தர நர்சு இருந்தாலும், பெரும்பாலான பணிகளை நாங்களே செய்து வருகிறோம். இது குறித்து வெளியில் பேசினால், அவர்கள் மீது 'சஸ்பென்ட்' நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமீபத்தில் கூட, இது தொடர்பாக ஒரு நர்சு சஸ்பென்ட் செய்யப்பட்டார். 2019ல் தேர்வான, 2,500 நர்சுகளுக்கும் இதே நிலை தான். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.தமிழக மருத்துவத்துறைக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. ஒரு பக்கம் டாக்டர்கள் பிரச்னை; மறுபுறம் இதோ நர்சுகள். நேரம் காலம் பாராமல், ஏழை நோயாளிகளின் நலனுக்காக பாடுபடும் இவர்களின் வாழ்வாதார பிரச்னைகளை தீர்க்க, அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rajesh
ஆக 27, 2024 14:11

தொழிலாளர் நலவாரியம் அலுவலகத்தில் 14 வருடம் தான்டி தினக்கூலியாக பணியாற்றுகிறோம் எந்த நிவாரணமும் இல்லை


S Sivakumar
ஆக 27, 2024 09:18

ஊழலில் உள்ள விசமிகள் மீது மாண்புமிகு தமிழக முதல்வர் பணம் பறிக்கும் வகையில் சட்டம் அமைத்து அதை அரசு மருத்துவமனையில் மற்றும் பள்ளிகளில் செலவுகள் செய்து வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை