உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சென்னை விமான நிலைய ஓடுபாதை மீண்டும் மிதக்கும் அபாயம்

சென்னை விமான நிலைய ஓடுபாதை மீண்டும் மிதக்கும் அபாயம்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 2023 டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் மிக்ஜாம் புயலால், கனமழை கொட்டியது. இதனால், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நந்தம்பாக்கம் தடுப்பணையை கடந்து, வினாடிக்கு 44,452 கன அடி நீர் வெளியேறியது. இப்பகுதியில் ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தனியார் மற்றும் அரசு பொது சொத்துக்களும் சேதம் அடைந்தன.மணப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் கரையில் உள்ள, 'ரிவர் வியூ காலனி' கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய ஓடுபாதையிலும் வெள்ளநீர் சூழ்ந்து, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, வெள்ள சேதத்தை தவிர்ப்பதற்காக, இங்கு ஆற்றின் கரையில் 770 மீட்டர் வெள்ளத் தடுப்பு சுவர், மூன்று இடங்களில் கீழ்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.வெள்ளநீர் செல்வதற்கு ஏதுவாக, இடது கரையில் 4,200 மீட்டர், வலது கரையில் 1,600 மீட்டர் மண்கரையை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இப்பணிகள் முடிந்தால் மணப்பாக்கம், கொளப்பாக்கம், நந்தம்பாக்கத்தில் வெள்ள சேதம் குறையும் வாய்ப்பு உள்ளது. விமான நிலைய ஓடுபாதையும் தப்பும்.அரசு, இப்பணிக்கு 24.8 கோடி ரூபாயை, நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது. மார்ச் மாதம் துவங்கிய பணிகள், ஏழு மாதங்களாக நடக்கிறது. ஆற்றின் இருபுறங்களிலும், விமான நிலையம் முதல் மியாட் பாலம் வரை மண்கரையை பலப்படுத்தும் பணிகள் முடியவில்லை. கீழ்நிலை மழைநீர் சேமிப்பு தொட்டி பணிகளும் இழுபறியாக உள்ளது.சென்னை மண்டல நீர்வளத்துறையினர் பணிகளை முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், நடப்பாண்டும், சென்னை விமான நிலைய ஓடுபாதை வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ