காமராஜர் பெயர் விவகாரத்தில், காங்கிரஸ் கோஷ்டிகள் போட்ட திட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டு விட்டதாக, சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ptz9x4ft&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காமராஜர் பெயரில் இயங்கி வந்த திருத்தணி காய்கறி சந்தைக்கு, கருணாநிதி பெயர் வைக்கப்பட இருப்பதாக, தகவல் வெளியானது. அதற்கு த.மா.கா., -- பா.ம.க., - நா.த.க., போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையடுத்து, காங்கிரஸ் எம்.பி., மாணிக்தாகூர், எம்.எல்.ஏ.,க்கள் ராஜேஷ்குமார், துரை சந்திரசேகர் உள்ளிட்டோர், காமராஜர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விவகாரத்தை முன்வைத்து, தி.மு.க., அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவும், அதன் வாயிலாக, ஆளுங்கட்சியுடன் இணைக்கமாக உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் ஸ்டாலினிடம் நெருக்கடி ஏற்படுத்தவும் திட்டமிட்டனர். காங்., நிர்வாகிகள் இப்படி திட்டமிடும் விஷயத்தை மோப்பம் பிடித்த உளவுத்துறையினர், தகவலை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து, காமராஜர் பெயரில் இயங்கி வந்த திருத்தணி காய்கறி சந்தையின் பெயரை மாற்றப்படமாட்டாது; காமராஜர் பெயரிலேயே தொடர்ந்து இயங்கும் என அறிவித்து விட்டார். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயன்ற, காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் திட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின், 'செக்' வைத்து விட்டதாக, செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:காங்கிரசுடன் இணக்கமான உறவைத் தொடர்ந்து, நல்ல விதமாகவே கூட்டணி தொடர வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். அதே மனநிலையிலேயே செல்வப் பெருந்தகையும் உள்ளார். ஆனால், காங்கிரசில் செல்வப்பெருந்தகைக்கு எதிராக செயல்படும் சில கோஷ்டி தலைவர்கள், அ.தி.மு.க., அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றனர். இதுபோன்ற சிறு பிரச்னைகளை ஊதி பெரிதாக்குவதன் வாயிலாக, காங்., - தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்படும் என நினைக்கின்றனர். அதற்காகவே திட்டமிட்டு சில காரியங்களை செய்துள்ளனர். அப்படியொரு காரியம் தான், திருத்தணி காய்கறி சந்தை பெயரை மாற்றக் கூடாது என கொடிபிடித்தது.இதை அறிந்ததும், சுதாரித்த முதல்வர், திருத்தணி சந்தை காமராஜர் பெயரிலேயே இயங்கும் என என அறிவித்து விட்டார். இதனால், செல்வப்பெருந்தகைக்கு எதிர்ப்பான காங்கிரசார், அடுத்து ஏதாவது விஷயத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுக்கப் பார்ப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -