உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கேழ்வரகு கொள்முதலில் சொதப்பல்; இலக்கு 17,000; வாங்கியதோ 4 டன்!

கேழ்வரகு கொள்முதலில் சொதப்பல்; இலக்கு 17,000; வாங்கியதோ 4 டன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், கடந்த 25 நாட்களில் தர்மபுரி மாவட்டத்தில், ஆறு விவசாயிகளிடம் இருந்து 4 டன் மட்டுமே, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால், இந்த சீசனிலும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கொள்முதல் செய்யப்படாத நிலை உருவாகும்.ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு கேழ்வரகு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசும், பல்வேறு ஊட்டச்சத்து திட்டங்களில் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய வகைகளை சேர்த்துள்ளது. அதற்கு, சிறுதானியங்கள் தேவைப்படுவதால், நாடு முழுதும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழக விவசாயிகளிடம் இருந்து, 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்து தர, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக கிலோவுக்கு, 42.90 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்படுகிறது.தமிழகத்தில் கேழ்வரகு அதிகம் விளையும் தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து, இம்மாதம் 1ம் தேதி முதல் கேழ்வரகு கொள்முதல் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உத்தரவிட்டது. நேற்று வரை, தர்மபுரியில் ஒரே ஒரு கொள்முதல் நிலையத்தில், ஆறு விவசாயிகளிடம் இருந்து, 3.80 டன் கேழ்வரகு மட்டுமே பெறப்பட்டுள்ளது. கடந்த சீசனில், 17,000 டன் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், 1,889 டன் மட்டுமே நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்தது. இதற்கு, தாமதமாக கொள்முதல் நிலையங்களை துவக்கியதும், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததும் முக்கிய காரணங்கள். இதனால், விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு கேழ்வரகு வாங்கிய வியாபாரிகள், பிஸ்கட் தயாரிப்பு உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு, அதிக விலைக்கு விற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த சீசனில் கேழ்வரகுக்கு அரசின் சார்பில் நல்ல விலை வழங்கப்படுகிறது. இருப்பினும், நான்கு மாவட்டங்களிலும் அதிக கொள்முதல் நிலையங்களை திறக்காமலும், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமலும், வாணிப கழகம் அலட்சியம் காட்டி வருகிறது.இதனால், முந்தைய சீசனை போல, நடப்பு சீசனிலும் கேழ்வரகு கொள்முதலில் இலக்கை அடைய முடியாத நிலை உள்ளது. எனவே, உணவு துறை உயரதிகாரிகள் விவசாயிகளை நேரில் சந்தித்து, கேழ்வரகு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !