சிதம்பரம்: 'சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை விற்று விட்டதாக தங்கள் மீதான அரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது' என, தீட்சிதர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவில் கமிட்டி செயலர் வெங்கடேச தீட்சிதர் மற்றும் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yugizpk7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமான கணக்கு வழக்குகளை ஆய்வு செய்யவும், சட்ட விரோத கட்டுமான பணிகளை நிறுத்தவும், அறநிலையத் துறை தாக்கல் செய்த மனுக்கள் மீது, சென்னை ஐகோர்ட் சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது. வழக்கில், 2014 முதல் 2024 வரை, கோவிலின் வரவு செலவு கணக்கு விபரங்கள் பொது தீட்சிதர்களால் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கோவிலின் அறக்கட்டளைகள் வாயிலாக தினசரி பூஜை, மாத பூஜை விழாக்கள் நடைபெறுவது, கோவில் பராமரிப்பிற்கு தீட்சிதர்கள் பங்களிப்பு, வரவு செலவு கணக்குகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவில் நிலங்கள் அரசாணை எண் 835/1976ன் படி, தனி தாசில்தார் பராமரிப்பில் உள்ளன. 3,000 ஏக்கருக்கு மேல் உள்ள கோவில் நிலங்களிலிருந்து வரும் வருவாயில் கோவிலுக்கான மின்கட்டணம் மின்துறைக்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், வருவாய் குறைவாக இருப்பதால் மீத தொகையை தனியார் வங்கி நன்கொடை மற்றும் பொது தீட்சிதர்கள் தங்களுக்குள் வசூல் செய்து ஈடுகட்டி வருகிறோம்.ஏற்கனவே, 2024 செப்., 5ம் தேதி கோர்ட் விசாரணையில், கோவில் வருமானம் தற்போது 2 லட்சம் ரூபாய் என, வரவு செலவு கணக்கு விபரம் தாக்கல் செய்யப்பட்டது. கோவில் நிலங்களிலிருந்து மிக குறைவாக குத்தகை வசூல் செய்யப்படுவதாக ஆதாரப்பூர்வமாக பொது தீட்சிதர்கள் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், எவ்வித ஆதாரமும் இல்லாமல், 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டனர் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளாக பொது தீட்சிதர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆதாரமில்லாமல் அரசு தரப்பு உதவியுடன், கோவில் எதிர்ப்பாளர்கள் சிலரது ஏற்பாட்டில், பொய் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.தற்போது உச்சக்கட்டமாக, கோவில் இடத்தை விற்று விட்டதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால், தீட்சிதர்களுக்கு ஈடுசெய்ய முடியாத களங்கம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை ஆதாரமின்றி பொது தீட்சிதர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு, மறுப்பு தெரிவிக்கவில்லை எனில், பொது தீட்சிதர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என்பதால், பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.