திண்டுக்கல்: ஐகோர்ட்டில் அனுமதி பெற்று, கோவில் திருவிழாவிற்கான அன்னதானத்தை, அரசுக்கு சொந்தமான மைதானத்தில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஒரு தரப்பை சேர்ந்த, 500 பேர் தானாக முன்வந்து கைதாகினர். பின்னர், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், மறியலிலும் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.திண்டுக்கல் மாவட்டம், என்.பஞ்சம்பட்டி மைதானத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, அன்னதானம் நடத்த, ஒரு தரப்பினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அனுமதி பெற்றனர்.கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்த நிலையில், கிராம மைதானத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு தரப்பினர் திரு இருதய ஆண்டவர் சர்ச் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் துவக்கினர்.அவர்களிடம், தாசில்தார் தலைமையில் பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. நேற்று முன்தினம் 3வது நாளாக போராட்டம் நடந்த நிலையில், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு போராட்ட குழுவினர் சர்ச் வளாகத்திலிருந்து வெளியே வந்தனர். மைதானத்தில் இரும்பு தடுப்புகளுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய, தாங்களாகவே முன்வந்து கைதாவதாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, திண்டுக்கல் அழைத்து செல்லப்பட்டனர். அதில், 119 ஆண்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.இதையடுத்து, வழக்கமான பூஜைகளுடன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. குறிப்பிட்ட மைதானத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அன்னதானமும் நடந்தது.இந்நிலையில், கைதானவர்கள் விடுவிக்கப்பட்ட பின், குறிப்பிட்ட மைதானத்தை பாஸ்கு மைதானமாக அறிவிக்க வேண்டும்.இந்த கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், தங்கள் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்க போவதாக கூறி, கருப்புப்பட்டை அணிந்த படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.கலெக்டர் அலுவலக சர்வீஸ் ரோட்டில் மறியலிலும் ஈடுபட்டனர். கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப் அவர்களில் சிலரை அழைத்து பேசினர். அரசு தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
அதிகாரிகளிடம் 'ஈகோ' நிலவுகிறது: அதிருப்தி வெளியிட்டது ஐகோர்ட்
பஞ்சம்பட்டி கோவில் விழாவை முன்னிட்டு, அரசு மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தர விட்டது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சுரேஷ் பெர்க்மன்ஸ் என்பவர், 'அன்னதானத்திற்கு தடை விதிக்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், '2017ல் சமாதான கூட்டத்தில், 100 ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட விழாக்களை தவிர வேறு எந்த விழாவையும் நடத்தக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது. இது வரை அங்கு மதம் சார்ந்த அன்னதானம் நடக்கவில்லை. தற்போது அன்னதானம் நடத்த உரிமை கோரியதை, தனி நீதிபதி அனுமதித்துள்ளார். இதன் மூலம் இனி தொடர்ந்து அன்னதானம் நடத்த உரிமை கோருவர்' என, வாதிட்டார். நீதிபதிகள், 'அன்னதானம் துவங்கிவிட்டதால் தடை கோரிய மனு காலாவதியாகிவிட்டது. அம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பிரதான மனு மீதான விசாரணை நவ., 13க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. பொதுச்சாலையாக உள்ள மாற்று இடத்தில் அன்னதானம் நடத்தலாம் என தாசில்தார் உத்தரவில் குறிப்பிட்டது ஏற்புடையதல்ல. அவர் மதியம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர். மதியம், 2:40 மணிக்கு இவ்வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர். தாசில்தார் முத்துமுருகன் ஆஜரானார். நீதிபதிகள், 'பொது நோக்கத்திற்காக அரசு இடத்தை யாரும் பயன்படுத்தலாம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. அதிகாரிகள் ஏன் தேவையின்றி பிரச்னையை உருவாக்குகின்றனர். சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது அதிகாரிகளின் கடமை. அதிகாரிகள் மக்களை சந்திப்பதில்லை. கள நிலவரத்தை ஆய்வு செய்தால் தீர்வு ஏற்படும்' என்றனர். தாசில்தார், 'இன்ஸ்பெக்டருடன் பஞ்சம்பட்டியில் ஆய்வு செய்தேன்' என்றார். நீதிபதிகள், 'மனிதர்களின் உணர்வுகளை அதிகாரிகள் புரிந்து கொள்வதில்லை. ஊரிலுள்ள பெரிய மனிதர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும். தேவையின்றி அரசியல் கட்சிகள் பிரச்னைகளை உருவாக்குகின்றன. அதிக ஓட்டு வங்கி உள்ளவர்களுக்கு ஆதரவளிக்கின்றன. இதனால் பலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 'ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், தற்போது ஒரு மாதிரியாக பேசுவார். அவர் எதிர்க்கட்சியாக மாறிவிட்டால் வேறு மாதிரியாக பேசுவார். ஆட்சியாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பர். அதிகாரிகள் 60 வயது வரை பதவியில் இருப்பர். அதிகாரிகள் தான் மக்களுக்கு பொறுப்பானவர்கள். அவர்கள் மத்தியில் 'ஈகோ' நிலவுகிறது. அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு தேவை' என்றனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், 'சம்பந்தப்பட்ட இடத்தை கிறிஸ்துவர்கள் 100 ஆண்டுகளாக பயன்படுத்துகின்றனர்' என்றார்.