உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 57 பேர் டிஸ்மிஸ்; 87 பேர் சஸ்பெண்ட் தமிழக சிறை துறையில் என்ன நடக்கிறது?

57 பேர் டிஸ்மிஸ்; 87 பேர் சஸ்பெண்ட் தமிழக சிறை துறையில் என்ன நடக்கிறது?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக சிறைத்துறையில் இரு ஆண்டுகளில், பல்வேறு காரணங்களுக்காக காவலர்கள் உள்ளிட்ட 57 பேர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளனர். பெண் எஸ்.பி., உட்பட 87 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.தமிழக சிறைத்துறை தலைவராக மகேஸ்வர் தயாள், 2023 டிசம்பரில் பொறுப்பேற்றார். சமீபத்தில், வேலுார் சிறையில் ஆய்வு செய்த டி.ஜி.பி.,யை சந்தித்து, தன் குறையை தெரிவித்த காவலர் ஒருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுரை சிறை முறைகேடு வழக்கு தொடர்பாக, பெண் எஸ்.பி., ஊர்மிளா உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுபோல பல்வேறு காரணங்களுக்காக, இரு ஆண்டுகளில் 57 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்; 87 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகரிப்பு

இதுகுறித்து சிறை காவலர்கள் கூறியதாவது:குடும்ப பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட காவலரை சஸ்பெண்ட் செய்வது வழக்கம். ஆனால், சமீபகாலமாக டிஸ்மிஸ் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. உதாரணமாக, கடலுார் சிறை காவலர் ஒருவர், விபத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அதில், கீழமை நீதிமன்றம், விடுதலை செய்த நிலையில், அந்த காவலர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி பெண் காவலருக்கும், அவரது சகோதரருக்கும் சொத்து பிரச்னை. பெண் காவலர் பணியில் இருந்த நேரத்தில், தன் வீட்டினுள் புகுந்து தகராறு செய்ததாக, அவரது சகோதரர் பொய் புகார் அளித்தார். இவ்விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.இதுபோல, வழக்கு விசாரணை, பணியில் கவனக்குறைவு உள்ளிட்ட காரணங்களால், ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். கோவை சிறை நிர்வாகத்தால் மட்டும், 28 பேர் இந்நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளனர்.சில காவலர்கள் தேசிய, மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கும் மனு அளித்துள்ளனர். சிலர் நீதிமன்றத்தை நாடிய போது, டி.ஜி.பி.,யிடம் மனு செய்து, தீர்வு காணுமாறு திருப்பி அனுப்பப்பட்டனர்.

பாதிப்பு

டி.ஜி.பி.,யிடம் மனு அளித்தால், டி.ஐ.ஜி., - எஸ்.பி.,க்கள் நடவடிக்கையில் தலையிட முடியாது என, அவரும் திருப்பி அனுப்புகிறார். டி.ஜி.பி., உத்தரவுபடியே எல்லாம் நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாமல் இல்லை.சம்பந்தமே இல்லாமல் சஸ்பெண்ட், இடமாற்றம் என, எங்களை பந்தாடுவதால் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. பிள்ளைகளின் படிப்பு பாதிக்கிறது. புதுக்கோட்டை, வேலுார் சிறை காவலர்கள் இருவரின் குடும்பம் பிரிந்து சென்றதால், அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உடல்நலம் பாதித்துள்ளனர்.சீர்திருத்தம் என்ற பெயரில், எங்களை சிறைத்துறை வஞ்சிக்கிறது. சட்ட சபை கூட்டத்தொடரில், எங்கள் மீதான தண்டனை ரத்து செய்யப்படும் என, எதிர்பார்த்தோம். ஏமாற்றமே மிஞ்சியது. சில அதிகாரிகளின் துன்புறுத்தல் மனநிலையால், ஒட்டுமொத்த சிறை நிர்வாகமே பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஏப் 15, 2025 05:48

"சில அதிகாரிகளின் துன்புறுத்தல் மனநிலையால்.. " சட்டத்துக்காக, ஒழுங்கா வேலை செய்றவங்களே இப்படி சட்டத்தை கைல எடுத்து கூட இருக்கிறவங்களுக்கு இப்படி செய்தால் சாதாரண மக்களுக்கு எப்படி torture கொடுத்து இருப்பாங்க இந்த மாதிரி அரசு அதிகார மனிதர்கள்


முக்கிய வீடியோ