சென்னை: தமிழகத்தில் கூடுதலாக 6,000 ஓட்டுச்சாவடிகளை தேர்தல் கமிஷன் அமைக்க உள்ளதால், அரசியல் கட்சிகளுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் களம் இறங்கும் அரசியல் கட்சிகளுக்கு, 'பூத் ஏஜன்டு'கள் எனப்படும் ஓட்டுச்சாவடி முகவர்கள் முக்கியம். அவர்கள், வாக்காளர்களை தங்கள் கட்சி பக்கம் இழுப்பது, ஓட்டுப்பதிவின் போது கள்ள ஓட்டுகள் பதிவாவதை தடுப்பது, ஓட்டு எண்ணிக்கையை கண்காணிப்பது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஓட்டுச்சாவடி முகவர் அவசியம்.எனவே, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மட்டுமின்றி, சிறிய கட்சிகளும், ஓட்டுச்சாவடி வாரியாக முகவர் நியமனத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது 68,321 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அவற்றுக்கு தகுதியான முகவர்களை, பிரதான கட்சிகள் நியமித்துள்ளன. தற்போது, 1,200 வாக்காளருக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்க, இந்திய தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கூடுதலாக 6,000 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக, விரைவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, கலெக்டர்கள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். அரசியல் கட்சிகளின் பரிந்துரை பெற்று, புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அவற்றுக்கு முகவர்களை நியமிக்க வேண்டிய அவசியம், அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க.,வில், அதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி, மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.,வில் பல்வேறு குழப்பங்கள் அதிகரித்து வருவதால், புதிய முகவர்களை நியமிப்பதற்கான பணிகள் கிடப்பில் உள்ளன. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், த.வெ.க.,விலும் முகவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். பல மாவட்டங்களில் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இந்நிலையில், புதிதாக 6,000 முகவர்களை தேட வேண்டிய நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. மற்ற கட்சிகளிடம் விலை போகாத நபர்களை தேடிப் பிடித்து, ஓட்டுச்சாவடி முகவர்களாக நியமிக்க வேண்டிய நெருக்கடி அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.