''தமிழகத்தில் வேடிக்கையான ஒரு அரசை, முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார். கோவையில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது; போலீசாரே பாலியல் கொடுமை செய்துள்ளனர். பெண்களுக்கும், சிறுமியருக்கும் பாதுகாப்பு இல்லை. துாத்துக்குடியில், சமூக நலத்துறை அமைச்சர் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சியில் 6,991 சிறுமியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். அவர்களுக்கு மொத்தம் 104 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது,' என ஒப்புக் கொண்டுள்ளார். நிரந்தர டி.ஜி.பி.,யை நியமிப்பதில் ஏன் இவ்வளவு குளறுபடி? தகுதியான அதிகாரிகளை புறக்கணித்து விட்டு, ஜூனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமிக்க, தி.மு.க, அரசு திட்டம் போடுகிறது. இந்த விவகாரம், உச்ச நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்றம் உத்தரவிட்டும், டி.ஜி.பி., நியமனத்தில், தி.மு.க., அரசு விடாப்பிடியாக இருக்கிறது. தி.மு.க., அரசுக்கு வேண்டப்பட்டவரை டி.ஜி.பி.,யாக்கி, அவர் வாயிலாக சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளவே, இத்தனை கூத்துக்களையும் அரங்கேற்றுகின்றனர். டி.ஜி.பி., ஓய்வு பெற 3 மாதங்களுக்கு முன்பே, தகுதியானவர் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், சங்கர் ஜிவால் ஓய்வு பெற்று, மூன்று மாதங்களைக் கடந்தும், புது நிரந்தர டி.ஜி.பி., நியமிக்காமல், பொறுப்பு டி.ஜி.பி.,யை நியமித்து, எத்தனை காலத்துக்கு அரசு நிர்வாகம் நடக்கும். சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மட்டுமல்ல, யாரையுமே மதிக்காமல் தி.மு.க., அரசு நடந்து கொள்கிறது. எஸ்.ஐ.ஆர்., என்றாலே, தி.மு.க.,வினர் அலறுகின்றனர்; பதறுகின்றனர். போலி வாக்காளர்களை முழுதுமாக நீக்கி, நியாயமான தேர்தலை நடத்த, எஸ்.ஐ.ஆர்., அவசியம். தமிழகத்தில், அந்தளவுக்கு வாக்காளர் பட்டியலில் தவறு உள்ளது. எஸ்.ஐ.ஆர்., பணிகளை முடிக்க கொடுக்கப்பட்டிருக்கும் நாட்கள் போதுமானவை. படிவங்களை வழங்க 8 நாட்கள் போதும். ஆனால், 30 நாட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த போது, அங்கு குடிசை மாற்று வாரிய கட்டடத்தை இடித்து விட்டனர். அந்த கட்டடத்தில் இருந்தோரை, அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவில்லை. அது தொடர்பாக, தொடர்ந்து மனு அளித்தோம்; நடவடிக்கை இல்லை. இன்று வரை, இடிக்கப்பட்ட அந்த கட்டடத்தில் வசித்தோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது. இதையெல்லாம் சரி செய்யத்தான், வாக்காளர் திருத்தப்பதிவு நடக்கிறது. ஆனால், அதை முறையாக நடக்க விடாமல் தடுக்க, தி.மு.க., உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதை முறியடிக்கவே, அந்த வழக்கில் எங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என அ.தி.மு.க., தரப்பில் மனு அளித்துள்ளோம். உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க., தவறான தகவலை பதிவு செய்தால், அதை எங்கள் வாதத்தில் எடுத்து வைப்போம். உண்மை நிலையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சொல்வோம். முதிர்ந்த அரசியல்வாதிகளுக்குத்தான் மக்கள் பிரச்னைகள் முழுமையாகத் தெரியும். துணை முதல்வர் உதயநிதிக்கு, மக்கள் பிரச்னை மட்டுமல்ல; அரசியலிலும் எதுவும் தெரியாது. அப்படிப்பட்டவர், அ.தி.மு.க., ஆட்சியை குறை கூறுகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின், நிதி ஏதும் ஒதுக்காமல் பல திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறார். இப்படியொரு வேடிக்கையான அரசு, இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்தியதே இறுதியானதுதான். கூட்டணிக்கு, அ.தி.மு.க., தான் தலைமை தாங்குகிறது. தேர்தலில் வென்று, அ.தி.மு.க., மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும். கூட்டணியில், பழனிசாமியாகிய நான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை அமித் ஷாவே அறிவித்துள்ளார். செங்கோட்டையன் எழுப்பிய ஒருங்கிணைப்பு விவகாரம் முடிந்து போன ஒன்று. அது குறித்து இனி பேச வேண்டியதில்லை. இவ்வாறு கூறினார்.
ஸ்டாலின் சொல்வது
அத்தனையும் பொய்
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி சென்றபோது, 'தி.மு.க., ஆட்சியில், 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, 10 லட்சத்து 22,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது. முழுதும் நிறைவேறியதும், 32 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளன,' என சொன்னார். அதன்படி, 77 சதவீதம் என்றால் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். கோவையில், எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய். எதுவுமே இல்லை என்பதைத்தான் வெள்ளை பேப்பராக காண்பிக்கின்றனர். - பழனிசாமி பொதுச்செயலர், அ.தி.மு.க., - நமது நிருபர் -