உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே நிறைவேறிய 8 மசோதாக்கள்

எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே நிறைவேறிய 8 மசோதாக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்ட போதும், கிடைத்த நேரத்தில், எட்டு முக்கிய மசோதாக்கள், இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டன. லோக்சபா நேற்று காலை கூடியதும், கேள்வி நேரம் துவங்கியது. ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், கடும் கோஷங்கள் எழுப்பினர். அவர்களை அமைதி காக்கும்படி கேட்டுப் பார்த்தும் முடியாமல் போகவே, சபையை மதியம் 2:00 மணிவரை, சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மதியம் மீண்டும் சபை கூடியதும், திருத்தங்களுடன் கூடிய புதிய வருமானவரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அமளிக்கு இடையே விவாதமின்றி அது நிறைவேறியது. இதையடுத்து, தேசிய ஊக்க மருந்து தடுப்பு திருத்த மசோதா மற்றும் தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போதும், அமளி அதிகமாகிக் கொண்டே இருக்க, பெரும் கூச்சலுக்கு இடையே குரல் ஓட்டெடுப்பின் மூலம், இரு மசோதாக்களும் அதிரடியாக நிறைவேற்றப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மாலை 4:00 மணிக்கு கூடியபோது, வரிவிதிப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. கோரிக்கை மனு காலையில் ராஜ்யசபா கூடியதுமே, அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 2:00 மணிக்கு மீண்டும் கூடியபோது, மணிப்பூர் பட்ஜெட் குறித்த விவாதங்கள் துவங்கின. எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''முக்கிய கட்சிகளின் எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு, தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அளிக்கச் சென்றும் அனுமதிக்கப்படவில்லை,'' என்றார். அப்போது குறுக்கிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா, ''மசோதாவுக்கு சம்பந்தம் இல்லாத பேச்சு இது,'' என்றதும், அமளி அதிகமானது. ஆனாலும், விவாதத்துக்கு பதிலளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி முடித்ததும், மணிப்பூர் மாநிலம் குறித்த பட்ஜெட், மானிய கோரிக்கை மசோதா, ஜி.எஸ்.டி., திருத்த மசோதா ஆகிய மூன்றுமே, முறைப்படி, லோக்சபாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து அமளி நீடித்துக் கொண்டே இருந்தபோதும், வர்த்தக கப்பல் மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனாவால் இம்மசோதாவை அறிமுகப்படுத்தி முடித்ததும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி., கொல்லா பாபுராவ் பேசத் துவங்கினார். வெளிநடப்பு அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ''சபையில் இவ்வளவு பெரிய அமளி நிலவும் போது, இந்த மசோதாக்கள் எல்லாம் நிறைவேற்றுவது என்ன வகையான ஜனநாயம்,'' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா, ''அலுவல்களை, குறுக்கீடு செய்து கொண்டே இருக்க கூடாது. மணிப்பூர் குறித்து இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக பேசிய எதிர்க்கட்சிகள், அதே மணிப்பூர் மாநில மசோதாக்கள் நிறைவேற்றும்போது மட்டும், அதில் பங்கேற்காதது அதிர்ச்சியாக உள்ளது,'' என்றார். இதையடுத்து, அமளி அதிகமாகவே சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மாலை 3:00 மணிக்கு சபை கூடியதும், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் ஆணையத்துக்கு சென்றபோது, எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து, மீண்டும் பேச முயன்றார். அனுமதி மறுக்கப்படவே, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பின்னர், வர்த்தக கப்பல் மசோதா ஓட்டெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோவா சட்டபையில், பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவ திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டு, ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. - நமது டில்லி நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

spr
ஆக 21, 2025 17:28

வாதப் பிரதிவாதங்கள் இல்லாமல் ஒரு மசோதா நிறைவேறுவது குடியாட்சியல்ல. எப்படியும் எதிரிக் கட்சிகளுக்கு அதிக உறுப்பினர்கள் இல்லையென்பதால் மசோதாக்கள் சட்டமாகிவிடுமென்றாலும், அவை விவாதிக்கப்பட வேண்டும். வாக்களிக்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு கூட அதன் நிறை குறைகள் தெரிய வாய்ப்பில்லை. வெளி நடப்பு செய்தால் இருப்பவரின் அதிக ஆதரவு என்ற வகையில் ஆளும்கட்சிக்கே அதிக ஆதரவு என்பதால் அனைத்து மசோதாக்களும் அப்படியே நிறைவேறும். அவற்றில் உள்ள நிறை குறைகள் மக்களுக்கும் தெரியாமல் போகும். அறிவு முதிர்ச்சியற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் குடியாட்சித் தத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இவை இருந்தும் வீணே


Thiagaraja boopathi.s
ஆக 12, 2025 19:12

வாழ்க பிஜெபி


அசோகன்
ஆக 12, 2025 15:05

தெருநாய்களை பிடிக்க கோர்ட் உத்தரவு போட்டதுபோல் அதைவிட மோசமான indi கூட்டணி ஆட்களை கைது செய்ய உத்தரவு போடுங்க நாடு உருப்படும்


Devaraju
ஆக 12, 2025 14:44

Also pls bring in UCC


பேசும் தமிழன்
ஆக 12, 2025 09:07

கான்கிராஸ் கட்சி மற்றும் அய்யன் இண்டி கூட்டணி ஆட்கள் அமளி செய்து கொண்டே இருக்கட்டும் ... அப்படியே பொதுசிவில் சட்ட மசோதாவையும் நிறைவேற்றி விடுங்கள் ...நீங்கள் தான் விவாதங்களுக்கு வராமல் அமளி செய்து கொண்டு இருந்தீர்கள் என்று இண்டி கூட்டணி ஆட்களை பார்த்து கூறிக்கொள்ளலாம்.. அது தான் நீங்கள் நாட்டு மக்களுக்கும் ..... நாட்டிற்கும் செய்யும் நன்மை.


naranam
ஆக 12, 2025 09:04

சபாஷ்,! இது கட்சிகளின் வேஷம் கலைந்தது.. இப்படியே அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்ற வேண்டும்..


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 12, 2025 07:32

தரமான சம்பவம் செய்திருக்கிறது மத்திய அரசு....


முக்கிய வீடியோ