மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவியை, அமைச்சர் மூர்த்தியின் மனைவி செல்லம்மாளுக்கு வழங்க, மதுரை மாவட்ட தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உட்கட்சி கோஷ்டி பூசலால், மதுரையில் உள்ள 10 தொகுதிகளில், தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கவலை கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u1emrgxb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரை மாவட்ட தி.மு.க.,வில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்டச் செயலர்கள் தளபதி, எம்.எல். ஏ., மணிமாறன் என நான்கு கோஷ்டிகள் செயல்படுகின்றன. சமீபத்தில் அமைச்சர் மூர்த்தி, தன்னுடைய மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகத்தை விரிவாக்கம் செய்வதற்காக, மதுரை தெற்கு, மதுரை மாநகர் மாவட்டத்தை டம்மியாக்கும் வகையில், நிர்வாகத்தை பிரித்து, புதிய நிர்வாகிகளாக தன் ஆதரவாளர்களை நியமிக்க வைத்தார். இதனால், மூர்த்தி மீது மாவட்டச் செயலர்கள் தளபதி, மணிமாறன், அவர்களின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மதுரை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகியை, மதுரை வடக்கு மாவட்டத்திற்கு மாற்றி, தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியும் வழங்கி, மதுரை மேற்கு தொகுதியின் வேட்பாளராக்கும் முயற்சியில் அமைச்சர் மூர்த்தி ஈடுபட்டு வருகிறார். இந்த விவகாரமும், கட்சியினரிடம் புகைச்சலை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக உள்ள அமைச்சர் தியாகராஜனின் தாய் ருக்மணியின் பதவி காலம், வரும் 29ல் முடிவடைகிறது. புதிய தலைவராக, தன் மனைவி செல்லம்மாளை கொண்டு வரும் முயற்சியில் அமைச்சர் மூர்த்தி ஈடுபட்டுள்ளார். இதை, மதுரை மாவட்ட தி.மு.க.,வினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அனைவரும், மூர்த்தி யின் மனைவி செல்லம்மாளுக்கு பதவி வழங்கக்கூடாது என, கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, மதுரை மாவட்ட தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: விஜய் கட்சியின் மாநாட்டுக்கு போட்டியாக, மதுரையில் பொதுக்குழு நடத்தி பாராட்டை பெற்றார். இதனால், துணை முதல்வர் உதயநிதியின் பாராட்டை பெற்று, அவருடைய ஆதரவாளராக மூர்த்தி மாறி விட்டார். இதையடுத்து, கட்சிக்குள் அதிகார தோரணையில் நடக்கிறார். வரும் சட்டசபை தேர்தலில், மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும், வெற்றி தேடி தரும் பொறுப்பை ஏற்றுள்ளதால், வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் செலவு உள்ளிட்ட பொறுப்பையும் ஏற்றுள்ளார். இதனால், மதுரை தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், தன் மனைவிக்கு பதவி பெற அமைச்சர் மூர்த்தி முயற்சிப்பது, கட்சி யினரை கோபப்படுத்தி உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின - நமது நிருபர் -.