இந்தாண்டுக்கான மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்புத்தகங்களில், 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்த பாடத்தை இணைத்து, என்.சி.இ.ஆர்.டி., எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மாணவர்களின் மனதில் நாட்டுப்பற்றை வளர்த்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் தந்த பதிலடி நடவடிக்கையான, 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து, மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தனியாகவும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, மேம்பட்ட வகையிலும், ஒரு பாடத்திட்டத்தை, என்.சி.இ.ஆர்.டி., வடிவமைத்துள்ளது. புதிய கல்வி கொள்கையின்படி, நடப்பு நிகழ்வுகளை அவ்வப்போது பாடத்திட்டத்தில் சேர்க்க, பார்லிமென்டில் என்.சி.இ.ஆர்.டி., ஒப்புதல் பெற்றுள்ளது. அதன்படி, விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியரான சுபானுஷு சுக்லா பற்றியும், 'இஸ்ரோ'வின் மங்கல்யான் திட்டம் பற்றியும், பாடப் புத்தகங்களில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, இந்திய ராணுவம் எடுத்த போர் நடவடிக்கைகள் குறித்து, முதல்நிலை மாணவர்களுக்கு, 'வீரப்பயணத்தின் துவக்கம்' என்ற தலைப்பிலும், மேல்நிலை மாணவர்களுக்கு, 'துணிச்சலும் மரியாதையும்' என்ற தலைப்பிலும், 8 முதல் 10 பக்கங்களில், புதிய பாடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதில், பஹல்காம் தாக்குதலுக்கும், பாகிஸ்தான் ராணுவ தலைமைக்குமான தொடர்புகள்; பயங்கரவாதத்தை தடுக்க பாகிஸ்தானுக்கு வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காதது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்திய ஆயுதப்படைகளின் வீரம் மிக்க நடவடிக்கைகளால், பாகிஸ்தான் ஆயுதப்படை, போர் நிறுத்தத்துக்கு அடிபணிந்தது வரை விரிவாக கூறப்பட்டுள்ளது. 'ஆப்பரேஷன் சிந்துார் என்பது, வெறும் குறியீட்டு பெயர் அல்ல; திருமணமான பெண்களின் மரியாதையைக் காக்கவும், கணவனை இழந்த ஹிந்து பெண்களுக்கு தங்களின் அன்பையும் உறுதுணையையும் தெரிவிக்கும் லட்சக்கணக்கான மக்களின் உணர்வை பிரதிபலிப்பது' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியதையும், இப்பாடத்தில் குறிப்பிட்டுள்ளனர். - நமது நிருபர் -