'அ.தி.மு.க., வை சீரமைக்க, 38 வருவாய் மாவட்டங்களில், லட்சம் பதவிகளை இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்க, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி புதுத்திட்டம் வகுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஆர்,கே.நகர் இடைத்தேர்தல், 2019 லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்.கடந்த, 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் என, வரிசையாக பதினோரு தோல்விகளை பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., சந்தித்துள்ளது. இதனால் வரும் 2026 சட்டசபை தேர்தலில், எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க., தலைமை உள்ளது. இதற்காக, கட்சியை சீரமைத்து, கட்சியினருக்கும் தொண்டர்களுக்கு புது தெம்பூட்ட கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டு உள்ளார். புதுத்திட்டம்
இதற்காக, புதுத்திட்டம் ஒன்றையும் அவர் வகுத்துள்ளார். கட்சியில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், 1.50 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் உள்ளனர். தமிழகம் முழுதும், 12,600 ஊராட்சிகள் உள்ளன. ஒரு ஊராட்சியில் உள்ள, அனைத்து கிளைக் கழக வார்டுகளிலும், கட்சிக்கான வட்டச் செயலர், அவைத் தலைவர், பொருளாளர் போன்ற பதவிகளில் நிர்வாகிகள் உள்ளனர். இவர்களை தவிர்த்து, இளைஞர்களுக்கு 38 வருவாய் மாவட்டங்களிலும், லட்சம் பதவிகளை உருவாக்கி, அதை வழங்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். கிளை, பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகள் பதவிகளை தவிர, மாணவர் அணி, இளம் பெண்கள் பாசறை, இளைஞர் பாசறை, தொழில் நுட்ப அணி, ஜெயலலிதா பேரவை போன்ற அணிகளுக்கு, அனைத்து ஊராட்சிகளிலும், பதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவையானால், ஏற்கனவே கட்சியில் இருக்கும் அணிகளோடு கூடுதலாக சில அணிகளை ஏற்படுத்தி, அவற்றுக்கும் நிர்வாகிகள் நியமிக்கவும் திட்டமிடப்பட்டுஉள்ளது. இளைஞர் பட்டாளம்
கட்சிக்கு புதிதாக இளைஞர்களை வரவழைக்கவும், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு, ஏற்கனவே நிர்வாகிகளாக இருப்போரின் வாரிசுகள் ஓட்டம் பிடிக்காமல் தடுக்கவும், இளைஞர்கள் பட்டாளம் கொண்ட கட்சியாக, அ.தி.மு.க.,வை மாற்றவும் திட்டமிடப்பட்டு, அதற்கேற்ப விரைந்து நடவடிக்கை எடுக்கும் தீவிரத்தில் கட்சியினரை முழு வேகத்தில் முடுக்கி விட்டுள்ளார் பொதுச்செயலர் பழனிசாமி. இதற்காக, கட்சி நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களில் இளைஞர்களாக இருக்கக் கூடியவர்களின் பட்டியலை, ஒன்றிய, நகர, மாவட்ட அளவில் தயார் செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளது.கட்சியில் புதுமுகங்களுக்கு பதவி கிடைப்பதன் வாயிலாக, தங்களுக்கும் எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு ஏற்படும், கட்சிக்கும் புது ரத்தமும் பாய்ச்சப்படும். அதற்காகவே இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த பழனிசாமி முனைப்புடன் களம் இறங்கி உள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன - நமது நிருபர் -.