உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சோதனை! அடுத்தடுத்து கோளாறில் சிக்கும் ஏர் இந்தியா: ஒரே நாளில் 13 விமானங்களின் சேவை ரத்து

சோதனை! அடுத்தடுத்து கோளாறில் சிக்கும் ஏர் இந்தியா: ஒரே நாளில் 13 விமானங்களின் சேவை ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆமதாபாதில் நடந்த பயங்கர விமான விபத்துக்கு பின், 'போயிங்' நிறுவனத்தின், '787 - 8 ட்ரீம்லைனர்' விமானங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில், இருவழிகளில், 13 ட்ரீம் லைனர் விமானங்களின் சேவையை, 'ஏர் இந்தியா' நிறுவனம் ரத்து செய்தது. குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு, 242 பேருடன் சமீபத்தில் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம், 600 - 800 அடி உயரமே பறந்த நிலையில், சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து வெடித்து சிதறியது.இதில், ஒரேயொரு பயணியை தவிர, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் முன்பகுதி மோதியதில், பி.ஜே.மருத்துவக் கல்லுாரியின் 10க்கும் மேற்பட்ட மாணவர்களும் உயிரிழந்தனர்.

தீவிர கண்காணிப்பு

இந்த விபத்தைத் தொடர்ந்து, போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் விமானங்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த, டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று, ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங் உள்ளிட்டோருடன், டி.ஜி.சி.ஏ., அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினர்.இதைத் தொடர்ந்து, டி.ஜி.சி.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை:ஏர் இந்தியா நிறுவனத்திடம் மொத்தம், 33 போயிங் 787 - 8/9 விமானங்கள் உள்ளன. ஆமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து, இவற்றில், 24 விமானங்கள் கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், எந்த பாதுகாப்பு குறைபாடுகளும் கண்டறியப்படவில்லை; தற்போதுள்ள பாதுகாப்பு தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், பொறியியல், செயல்பாடுகள் மற்றும் தரையிறங்குதல் பிரிவுகளில் உள்ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பயணியரின் சிரமத்தை குறைக்க உதிரி பாகங்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும் ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டது.மேலும், விமானங்கள் தாமதமாவதை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.இஸ்ரேல் உடனான மோதலால், வான்வழியை ஈரான் மூடி உள்ளது. இதனால், விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை தாமதமாகலாம். இது தொடர்பாக பயணியருக்கு முன்கூட்டியே விமான நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும். கடைசி நேரத்தில் பயணியரை அலைக்கழிக்கக் கூடாது. கடந்த ஐந்து நாட்களில், இரு வழிகளில், 66 போயிங் - 787 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.ஆமதாபாத் விமான விபத்து நடந்த ஜூன் 12ல், 50 போயிங் - 787 விமானங்களை ஏர் இந்தியா இயக்கியது. இதில், 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜூன் 13ல், 41 விமானங்கள் இயக்கப்பட்டதில், 11 ரத்தாகின.

வலியுறுத்தல்

ஜூன் 14ல், 47 விமானங்கள் இயக்கப்பட்டன; 12 ரத்து செய்யப்பட்டன. ஜூன் 15ல், 41 விமானங்கள் இயக்கப்பட்டன; 14 ரத்தாகின. ஜூன் 16ல், 39 இயக்கப்பட்டதில், 11 ரத்து செய்யப்பட்டன. நேற்று பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி, இரு வழிகளில், 30 போயிங் - 787 விமானங்களை ஏர் இந்தியா இயக்கியதில், 13 ரத்து செய்யப்பட்டன. பயணியரின் பாதுகாப்பு, செயல்பாட்டு நம்பகத்தன்மை, ஒழுங்குமுறை இணக்கம் ஆகியவற்றிற்கான உறுதிப்பாட்டை டி.ஜி.சி.ஏ., மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும் அனைத்து திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களின் செயல்திறனையும் டி.ஜி.சி.ஏ., தொடர்ந்து கண்காணிக்கிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஜூன் 18, 2025 19:08

விமானங்களில் நட்டை கழட்டிக்கிட்டே இருக்கையில் துருக்கி கம்பெனி ஆளுங்களை வெளியே அனுப்பிட்டாங்களோ?


A.Sundaramoorthy.
ஜூன் 18, 2025 14:54

Each flight has compel to test drive fly for 10 minutes before pickup passengers. After arrival passengers may allow to travel. If they follow this method pilot can find out whether flight is okay or not to fly further. More over no accident will occur in future.


SUBBU,MADURAI
ஜூன் 18, 2025 18:00

Tata Group in exploratory talks with global consulting giant McKinsey for a possible Air India overhaul, reports Business Standard.


சிந்தனை
ஜூன் 18, 2025 09:18

அரசு எத்தனை சட்டங்களை போட்டு என்ன செய்ய அரசு ஊழியர்கள் ஒழுங்கா வேலை செய்தால் தானே? ஆனால் அரசு ஊழியர்களோ சம்பளம் வாங்கத்தான் வருகிறார்கள் வேலை செய்யவா வருகிறார்கள்.


புரொடஸ்டர்
ஜூன் 18, 2025 08:28

ஆபரேஷன் சிந்தூர் விளைவாக மத்திய அரசு ரத்து செய்த இந்திய விமான நிலையங்களில் செயல்பட்ட பிரேசில் நிறுவன ஒப்பந்தங்கள் விளைவாக சதி திட்டம் செயல்படுகிறதா?


Karthik
ஜூன் 18, 2025 10:23

எனக்கும் அவர்கள் மீதுதான் சந்தேகம் தோன்றுகிறது. ஏனெனில் அவர்களின் ஒப்பந்தத்தை முன்கூட்டியே இந்தியா ரத்து செய்த காரணத்தினால் இந்தியாவை பழிவாங்கும் விதமாக ஏர் இந்தியா விமானங்களில் ஏதேனும் உள்ளடி வேலை நடந்திருக்குமோ என்று தோன்றுகிறது.


பிரேம்ஜி
ஜூன் 18, 2025 07:16

இவ்வளவு வருடங்கள் எந்த சோதனையும் செய்யாமல்தான் ஏர் இந்தியா விமானங்களை இயக்கினார்களா? திடீரென்று வேண்டாத சோதனைகள் செய்து பயமுறுத்துவானேன்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை