''அ.தி.மு.க.,வுடன் கூட்டணியா என்பது குறித்து இப்போதே பேச வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில், 2026 சட்டசபை தேர்தல் தமிழக மக்களின் நலன் சார்ந்த தேர்தல். கட்சியின் நலனைவிட, தமிழக மக்களின் நலன், சில நேரங்களில் முக்கியம். எனவே, எனக்கு எந்த பொறுப்பை தந்தாலும், வேலை செய்வேன். தொண்டனாக வேலை செய்யவும் தயார். ''என்னால், யாருக்கும் எப்போதும் பிரச்சனை வராது. தலைவராக இருந்தால் தான் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழக நலன் மக்களின் நலன் முக்கியம்,'' என்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை டில்லியில் நேற்று அளித்த பேட்டி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தலைவர் நட்டா, அமைப்புச் செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்துப் பேசினேன். தமிழக பா.ஜ., வளர்ச்சி குறித்து ஆலோசித்தோம். 2026 தேர்தலைப் பொறுத்தவரை தமிழகத்துக்கு முக்கியமான தேர்தல். இந்த தேர்தல், தமிழக நலனுக்கான தேர்தல்.கூட்டணி அமைப்பதற்கான நேரம், அவகாசம் எல்லாமே இன்னும் நிறைய இருக்கிறது. பல விஷயங்கள் இன்னும் நடக்க வேண்டி இருக்கிறது. கட்சியின் நலன் முக்கியம்; அதை விட மக்களின் நலன் மிகவும் முக்கியம். கூட்டணி குறித்து தகுந்த நேரத்தில் தலைவர்கள் அறிவிப்பர். மாநில தலைவராக என் கருத்தை கூறி விட்டேன். 2026ல், தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து கீழிறக்க வேண்டும்.அ.தி.மு.க.,வுடன் கூட்டணியா என்பது குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. பா.ஜ.,வின் எதிரி தி.மு.க., தான். தற்போது, கட்சியின் வளர்ச்சிக்கான நேரம்; கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் தான் பேசுவேன்.விரைவில் மாநில தலைவர் தேர்தல் நடக்கப் போகிறது; அப்போது இதுபற்றி கூறுகிறேன். மீனவர்க்கு 1974 வரை...
சர்வதேச கடல் எல்லையை நம் மீனவர்கள் வேண்டுமென்றே தாண்டவில்லை என்பதுதான் எங்களது வாதம். ஏற்கனவே கச்சத்தீவை தாண்டி, சர்வதேச கடல் எல்லை இருந்தது. அப்போது பிரச்னை இல்லை. கச்சத்தீவை தாரை வார்த்தபின், நமக்கான எல்லை குறைந்து விட்டது. 4,000 சதுர அடியை இழந்துள்ளோம். 1974 வரையில் பிரச்னை இல்லை.இந்திய கடற்படை படையினரால் நம் எல்லைக்குள் தான், நம் மீனவர்களை காப்பாற்ற முடியும். வேண்டுமென்றே யாரும் கடல் எல்லையை தாண்டவில்லை. மீன்பிடிக்கும் கடற்பரப்பு குறைவாக உள்ளது; அதற்கு தீர்வு காண வேண்டும்.மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மாற்றுத்திட்டங்களை ஆராய்ந்து வருகிறோம். குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப்பு, கடற்பரப்பை அதிகரிப்பது உள்ளிட்டவற்றை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.தி.மு.க.,வின் தவறை சுட்டிக்காட்டுவதில் பா.ஜ., தான் முதன்மை கட்சி. மக்கள் நலனுக்காக போராட்டம் நடத்தி தமிழகத்தில் அதிகமாக கைதாவது பா.ஜ.,வினர் தான். வாய்ச்சவடால் அடிப்பவர்களா அல்லது களத்தில் நிற்பவர்களா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்யட்டும். ராகுலைப் பற்றி பேசட்டுமே?
பொதுக்குழுவில் பேசிய விஜய், ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் என்பது வெறும் மைக்கை எடுத்து பேசிவிட்டு போவது மட்டுமல்ல. களத்தில் நின்று வேலைசெய்வது தான் அரசியல்.கடந்த, 1973ல் கடைசியாக தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்டபோது, நம் நாட்டில் லோக்சபா சீட்டுகளின் எண்ணிக்கை, 525ல் இருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது தமிழகத்துக்கு பூஜ்யம்தான் கிடைத்தது. 20 இடங்கள் உயர்த்தப்பட்டபோது, அதில், தமிழகத்தில் ஒரு 'சீட்' கூட கிடைக்கவில்லை.சில மாநிலங்களுக்கு மூன்று சீட் வரை அதிகமானது. சிலருக்கு கூடுதலாக இரண்டு கிடைத்தது. சிலருக்கு ஒரு சீட் தான் அதிகமானது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது; இங்கு தி.மு.க., ஆட்சியில் இருந்தது. அப்போதைய பிரதமர் இந்திராவின் ஆலோசனைக் கூட்டத்திற்கு போனது, கருணாநிதி. நாடு முழுதும் 20 லோக்சபா சீட்கள் உயர்த்தப்பட்டபோது, தமிழகத்திற்கு ஏன் ஒரு சீட் கூட கருணாநிதியால் உயர்த்தி வாங்க முடியவில்லை? தற்போது 2026ல் தொகுதி மறுவரையறை நடக்கும் போது தமிழகத்திற்கு ஒரு சீட் குறைந்தால், அப்போது விஜய் கேட்கட்டும்.அரசியலில் ஒரு தாதாவை அடித்தால் தான், இன்னொரு தாதாவை மக்கள் ஏற்றுக்கொள்வர். யார் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கின்றனரோ, அவரைப் பற்றி பேசினால், தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என எல்லாருமே நினைப்பர். ராகுலை பற்றி பேசினால் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. மோடியை பற்றி பேசினால் ஊடக வெளிச்சம் கிடைக்கும் என்பதால் விஜய் அப்படி பேசுகிறார். ரெட் ஜெயன்ட் - விஜய்
ரெட் ஜெயன்ட் மூவீஸ்க்கு திறப்பு விழா நடத்தியதே விஜய் தான். பீஸ்ட் உட்பட அவரது சில படங்களை வினியோகம் செய்ததும் ரெட் ஜெயன்ட்தான். எனவே, இந்த நிறுவனத்தை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் விஜய் தான். திரைத்துறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள அந்நிறுவனத்திற்கு தேங்காய் உடைத்தவரே விஜய் தான்.அப்படிப்பட்ட அவர், தி.மு.க.,வுக்கு ஆதரவாக பா.ஜ., செயல்படுவதாகக் கூறுவது அடிப்படையில் தவறு. என் கட்சியை வளர்க்க வேண்டும்; அந்த அடிப்படையில் செயல்பட்டேன். ஆனால், 2026 சட்டசபை தேர்தல், தமிழக மக்களின் நலன் சார்ந்த தேர்தல்.கட்சியின் நலனைவிட தமிழக மக்களின் நலன் சில நேரங்களில் முக்கியம். என்னால் பிரச்னை வராது
எனவே, எனக்கு எந்த பொறுப்பை தந்தாலும் வேலை செய்வேன். தொண்டனாக வேலை செய்யவும் தயார்; என்னால், யாருக்கும் எப்போதும் பிரச்னை வராது. தலைவராக இருந்தால் தான் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழக நலன், மக்களின் நலன் முக்கியம். அதற்காக அண்ணாமலை எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயார்.இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -