'பெண்களிடம் பேச சங்கடப்படுகிறீர்களா... இனி எளிதாக பேசலாம்' என்ற பெயரில், இளைஞர்களை ஆசை வலையில் சிக்க வைக்கும் செயலிகளின் பயன்பாடு, தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில், புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கவும், வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யவும், 'டேட்டிங்' கலாசாரம் இருந்து வருகிறது. இந்தியாவில், 2016க்கு பின், இந்த நடைமுறை வேகமாக வளர்ச்சி அடைந்தது. நல்ல நட்புடன் பழக வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட பல செயலிகள், நாளடைவில் பெரும் சிக்கலாக மாறியுள்ளன. 'நண்பர்களை தேடுங்கள்' என்ற பெயரில், இவை தவறான பாதைக்கு இளைஞர்களை இழுத்துச் செல்கின்றன. தனிமையில் இருக்கும் ஆண்களை குறிவைக்கும் இச்செயலிகள், பணம் வசூலித்து, பெண்களிடம் பேச வைக்கின்றன. முகம் தெரியாத பெண்களுடன் பேச, இளைஞர்கள் சில நுாறு ரூபாயில் இருந்து, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். 18 வயது ஆணும், 40 வயது பெண்ணும் மிக எளிதாக இணைக்கப்படுகின்றனர். 'பிரண்ட், தோஸ்த், வைப்லி' போன்ற செயலிகள் வழியாக, இந்த செயல்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது. இச்செயலிகளுக்கு எந்தவித விதிமுறைகளோ, வயது வரம்புக்கான முன்னெச்சரிக்கைகளோ கிடையாது என்பது, அதிர்ச்சி அளிக்கும் விஷயம். தற்போது, சில கும்பல்கள், 'சிண்டிகேட்' அமைத்து, இத்தகைய செயலிகளைப் பயன்படுத்தி, மோசடியில் ஈடுபடுகின்றன. அதனால், தமிழகத்தில் இத்தகைய செயலிகளை நீக்க, மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இல்லையெனில், இளைஞர்களின் எதிர்காலம் நாசமாகும் என்கின்றனர், 'சைபர்' வல்லுநர்கள். அவர்கள் கூறியதாவது:
எதிர் பாலினத்தவர்களுடன் பேச வேண்டும் என்ற மனநிலையை, பல செயலிகள் முதலீடாக பயன்படுத்துகின்றன. தனிமையில் வாழ்பவர்கள், பெண்களிடம் பேசத் தயங்குபவர்கள், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களே, இச்செயலிகளின் முக்கிய இலக்கு. இதற்காக, பல்வேறு நாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. சமூக வலைதளங்களில், உண்மையான நண்பர்கள் கிடைக்க, நீண்ட நாட்கள் தேவைப்படும். இச்செயலிகள், அதை எளிதாக்குகின்றன. அதாவது, முன்பின் தெரியாதவர்களிடம், உடனடியாக பேசும் வாய்ப்பு கிடைக்கிறது. பெண்கள் பேசுவதற்காக, பணம் செலுத்த வேண்டியதில்லை; ஆனால், ஆண்கள் பெண்களிடம் பேச கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்தது, 10 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை என்ன வேண்டுமானாலும் பேசலாம்; எதை வேண்டுமானாலும் கேட்கலாம். இதற்கு எந்தவித வயது வரம்பும் இல்லாததால், இளைஞர்கள் பலர் மோசடி வலையில் சிக்குகின்றனர். அவர்களிடம் தனிப்பட்ட தகவல்களை பெற்று, 'வாட்ஸாப்' போன்ற செயலி வழியாக, வீடியோ அழைப்பில் பேச வைத்து மிரட்டுவதும் நடக்கிறது. 'வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் கல்லுாரி மாணவியரிடம், போன் பேசினால் பணம் சம்பாதிக்கலாம்' என, 'இன்ஸ்டாகிராம்' பிரபலங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துகின்றனர். நாளடைவில் அதிகமாக பேசினால், அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பெண்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகின்றனர். இது, 'டிஜிட்டல்' விபசாரத்துக்கு இணையானதாக மாறி வருகிறது. சூதாட்ட செயலிகளை கண்டறிந்து, அவற்றுக்கு தடை விதிப்பதுபோல, இவ்வகை செயலிகளையும் உடனடியாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். இவை, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்து, குடும்பங்களையே பாதிக்கும். விதிமுறைகள் கடுமையாக்கப்படாமல் போனால், இளம் தலைமுறை சிக்கி சீரழியும். எனவே, இதுபோன்ற செயலிகளை தடை செய்ய கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -