உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பொருளாதார பவர் ஹவுஸ் ஆகும் அயோத்தி!

பொருளாதார பவர் ஹவுஸ் ஆகும் அயோத்தி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதக் கலவரங்கள் நடக்குமோ வன்முறை வெடிக்குமோ என ஒரு காலத்தில் மக்கள் அச்சத்துடனேயே புழங்கிய நகரம், இன்று சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளுடன், மிக முக்கியமான ஆன்மிக தலமாக வளர்ந்து வருகிறது. ராமர் பிறந்த மண் என போற்றப்படும் அயோத்தி தான் அந்நகரம். கடந்த 2017ல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சரயு நதிக்கரையில் அகல் விளக்கு ஏற்றப்பட்டபோது அது சாதாரண நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ராமர் கோவில் கட்டப்பட்டு, நாடு முழுதும் இருந்து பக்தர்கள் குவிந்து வரும் இந்த தருணத்தில், நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. அதே சரயு நதிக்கரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 26.60 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டதில், அப்பகுதியே ஜோதிமயமாக ஜொலித்தது. அத்துடன் ஒரே இடத்தில் மிக அதிக அளவில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது என்ற கின்னஸ் சாதனையையும் அயோத்தி படைத்திருக்கிறது. இப்படி கலாசாரத்தை இறுக பிடித்துக் கொள்வது மட்டுமின்றி, உள்கட்டமைப்பு வசதிகளிலும் அயோத்தி நகரம் பிரமிக்க வைக்கிறது. 32,000 கோடி ரூபாய் அளவுக்கு அதற்கான விதை துாவப்பட்டுள்ளது. இதனால், ராமர் பிறந்த அயோத்தி நகரம் சர்வதேச ஆன்மிக தலமாக, பொருளாதார மற்றும் சுற்றுலாவுக்கான முக்கிய கேந்திரமாக உருவாகி வருகிறது. ஆன்மிக மையம் இதற்காக, 'அயோத்தி 2047' என்ற தொலைநோக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக சாலை வசதிகள். ராமர் பாதை, பக்தி பாதை மற்றும் ஜென்மபூமி பாதை என அனைத்தும் நான்கு வழி சாலைகளாக இனி அயோத்தியை இணைக்கப் போகிறது. பக்தர்கள் வசதிக்காக, 1,463 கோடி ரூபாய் மதிப்பில் அயோத்தியில் கட்டப்பட்ட மஹரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், நாட்டின் மிக முக்கிய நகரங்களை இணைக்கும் பாலமாகி இருக்கிறது. விரைவில் இங்கிருந்து சர்வதேச நாடுகளுக்கும் விமான சேவை துவங்கப்பட உள்ளது. சரயு படித்துறைகள் மிக சுத்தமான இடமாக மாறி இருக்கிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவதற்கு வசதியாக, படித்துறைகளில் தாராள இட வசதி அமைக்கப் பட்டுள்ளது. ''எப்போது ராமர் கோவில் எழுப்ப அடிக்கல் நாட்டப்பட்டதோ, அப்போது முதலே அயோத்தி நகரம் ஆன்மிக சுற்றுலா மையமாக உருமாறி வருகிறது,'' என்றார், உள்ளூர் சுற்றுலா ஏற்பாட்டாளரான அனன்யா சர்மா. அயோத்தியில் இயங்கும் ஹோட்டல்களும் பக்தர்களின் வருகையால் கடந்த ஓராண்டாகவே நிரம்பி வழிகின்றன. பைசாபாத் ஹோட்டல் சங்கத் தலைவர் ஷரத் கபூர் கூறுகையில், ''சாதாரண நாட்களில் 70 சதவீத அறைகள் நிரம்பும் சூழலில், ராம நவமி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அனைத்து அறைகளும் முன்பதிவாகி விடுகின்றன,'' என்றார். மரியட், சரோவர், தாஜ் போன்ற ஆடம்பர ஹோட்டல்களும் அங்கே முதலீடுகளை அறிவித்து இருக்கின்றன. சில்லரை வர்த்தகமும் அமோகமாக நடக்க ஆரம்பி த்துள்ளது. குறிப்பாக, 'பீட்சா ஹட், டாமினோஸ், ஸ்மார்ட் பஜார், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ்' போன்ற நிறுவனங்களின் கடைகளும் அங்கே முளைக்க துவங்கி விட்டன. புதிய நம்பிக்கை தென் மாநிலங்களில் புகழ்பெற்ற உடுப்பி ஹோட்டலும் கோவில் வாசல் அருகே திறக்கப்பட்டு உள்ளதால், இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுகளை ருசி பார்க்க கூட்டம் அலை மோதுகிறது. ''வாய்ப்புகளின் நகரமாக அயோத்தி உருவாகி வருகிறது,'' என மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார் பேராசிரியர் வினோத் ஸ்ரீவத்ஸவா. இவர் உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில பொருளாதார அமைப்பின் தலைவராக இருக்கிறார். ''சுற்றுலா சார்ந்த வளர்ச்சி, மாநிலத்தின் ஜி.டி.பி., வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றி வருகிறது,'' என்றார் ஸ்ரீவத்ஸவா. அயோத்தியில் ராமர் கோவில் எழுப்பப் போவதாகக் கூறி, ஹிந்துக்களை கவர்ந்து வந்த பா.ஜ., கடந்த லோக்சபா தேர்தலில் சற்று பின்னடைவை சந்தித்தது. அயோத்தி அமைந்திருக்கும் பைசாபாத் லோக்சபா தொகுதியில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றது, பா.ஜ., தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பக்தி மட்டுமே ஓட்டுகளை கவராது என்பதற்கு அயோத்தி மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என அப்போது தேர்தல் வியூக வகுப்பாளர்கள் விமர்சித்தனர். இன்றைக்கு நிலைமை மாறி அயோத்தியை சுற்றி வளர்ச்சி திட்டங்கள் வேகம் எடுத்துள்ளன. சரயு நதிக்கரை முழுதும் ஏற்றப்பட்ட அகல் விளக்குகள், ஓங்கி எதிரொலிக்கும், 'ஜெய் ஸ்ரீ ராம்' பக்தி முழக்கம், பா.ஜ.,வுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. சரயு நதிக்கரையில் பிரகாசிக்கும் தீப ஒளி, பா.ஜ.,வை ஜொலிக்க வைக்குமா என்பது வரும் சட்டசபை தேர்தலில் தெரிந்துவிடும். - நமது சிறப்பு நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி