வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் முனீரெட்டி பெங்களூரு ஹென்னுரு போன்ற ரெட்டிக்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிடுகிறது
அடுக்குமாடி கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவோர், பக்கவாட்டு காலியிடங்களையும் சேர்த்து, மனையின் எல்லை வரை அடித்தள பகுதிகளை கட்டுவதால், அக்கம் பக்கத்தில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழும் ஆபத்து ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பொது கட்டட விதிகளின் அடிப்படையில், அடுக்குமாடி கட்டடங்களுக்கு நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி.,யும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வும் ஒப்புதல் அளிக்கின்றன. இதற்கான வரைபடங்களில் மனையின் எல்லைக்கும், கட்டடத்தின் எல்லைக்கும் இடைவெளி இருப்பது உறுதி செய்யப்படுகிறது. 18 அடி இடைவெளி
அதன்படி, கட்டடங்களின் வெளிப்புற சுவர்களில் இருந்து, மனையின் எல்லை வரை அதிகபட்சமாக, 18 அடி வரை இடைவெளி விட வேண்டும்.தரையின் மேற்பரப்பில் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், இந்த இடைவெளி இருப்பது பணி நிறைவு சான்றிதழுக்கான ஆய்வில் உறுதி செய்யப்படுகிறது. ஆனால், அதிக உயரமான அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது, மண் பரிசோதனை செய்து, உறுதியான பாறை அடுக்கு வரை சென்று, அஸ்திவார துாண்கள் நிறுத்தப்படுகின்றன. இதற்காக, 20 அடி ஆழம் வரை கூட, சில இடங்களில் அஸ்திவாரம் அமைக்கப்படுகிறது. அதிக ஆழத்தில் அஸ்திவாரம் அமைக்கும் நிறுவனங்கள், அந்த கட்டடத்தில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட தேவைகளுக்காக அடித்தள பகுதியை கட்டுகின்றன. தரைக்கு கீழ், ஒரு தளம் வரை கட்டுவதற்கு மட்டுமே ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்டது.ஆனால், குறிப்பாக வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள் கட்டும் நிறுவனங்கள், இரண்டு அல்லது மூன்று அடுக்கு வரை தரைக்கு கீழ் அடித்தளம் அமைக்கின்றன.இத்தகைய, 'ஸ்டில்ட்' எனப்படும் அடித்தள பகுதி, எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீட்டு வரம்பில் வராது. விதிமீறல்
இந்நிலையில், தற்போது சில நிறுவனங்கள், அனுமதித்த வரைபடத்துக்கு மாறாக, மனையின் எல்லை வரை அடித்தள பகுதியை விரிவாக்கம் செய்வது புதிய விதிமீறலாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.பக்கவாட்டு காலியிடத்தை கடந்து, மனையின் எல்லை வரை இதற்காக பள்ளம் தோண்டப்படுவதால், அக்கம் பக்கத்து கட்டடங்கள் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கட்டட அமைப்பியல் வல்லுனர் பி.பாலமுருகன் கூறியதாவது: அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது, பக்கவாட்டு காலியிடத்தின் கீழ் பகுதியில், அடித்தளம் அமைப்பது அப்பட்டமான விதிமீறல். கட்டடத்தின் வெளிச்சுற்று பகுதியை எல்லையாக வைத்து, அதற்கு ஏற்றபடியே அடித்தள கட்டுமானம் இருக்க வேண்டும். அடித்தள பகுதியின் பரப்பளவு ஆய்வு செய்யப்படுவதில்லை என்பதால், பல்வேறு நிறுவனங்கள் இது தொடர்பான விதிமீறலில் ஈடுபடுகின்றன. அனுமதிக்கப்பட்ட கட்டடத்தின் மொத்த பரப்பளவில், 40 சதவீதம் வரை அடித்தள பகுதி கூடுதலாக கட்டப்படுகிறது. இடியும் ஆபத்து
பணி நிறைவு சான்றிதழுக்கான ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள், இதை கவனிப்பதில்லை. இதனால், அக்கம் பக்கத்து கட்டடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, கட்டுமான நிலையில், பள்ளம் தோண்டி, எல்லை சுவர் அமைக்கும் காலத்தில் மண் சரிவு ஏற்பட்டால், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு ஆபத்து ஏற்படும். இந்த விஷயத்தில் புதிய கட்டுப்பாடுகளை, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: அடுக்குமாடி கட்டுமான திட்டங்கள் செயல்படுத்தும்போது, ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு செய்வதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். தொழில்முறை வல்லுனர்களின் சான்று இருந்தால் போதும் என்று, அதிகாரிகள் அமைதியாக இருந்து விடுகின்றனர். அடித்தள விரிவாக்கம் தொடர்பான விதிமீறல்களால், அக்கம் பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்கள், எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து ஏற்படுகிறது. சென்னையிலும், பெங்களூரு போன்ற நகரங்களிலும் ஏற்பட்ட கட்டட விபத்துகள், இதற்கு உதாரணமாக அமைந்துள்ளன. இவ்வாறு கூடுதல் பரப்பளவில் கட்டப்படும் அடித்தள பகுதி, எப்.எஸ்.ஐ., வரம்பில் வராது என்பதால், இதற்கு சொத்து வரி விதிப்பு உள்ளிட்டவையும் தவிர்க்கப்படுகின்றன. எனவே, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., மட்டுமல்லாது, உள்ளாட்சி அமைப்புகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் முனீரெட்டி பெங்களூரு ஹென்னுரு போன்ற ரெட்டிக்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிடுகிறது