சிறை செல்லும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களின் பதவியை பறிக்கும் மசோதாவை அடுத்த கூட்டத் தொடரில் பார்லி.,யின் இரு சபைகளிலும் நிறைவேற்ற, பா.ஜ., அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதே வேளையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்த மசோதாவை நிறைவேற்ற, மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவு தேவை என்பது மிகப் பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 21ல் துவங்கி, கடந்த 21ல் முடிவடைந்தது. பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, ஆப்பரேஷன் சிந்துார் போன்றவற்றை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால், பார்லி.,யின் இரு சபைகளும் முடங்கின. இருப்பினும், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே 12 மசோதாக்களை மத்திய அரசு இந்த மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது. குறிப்பாக, கூட்டத்தொடரின் கடைசி நாளில் அதிரடி மசோதா ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அதன்படி, பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள், ஐந்து ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்பதே அந்த மசோதா. இது, அனைத்து அரசியல் கட்சியினரையும் அதிரச் செய்தது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி கட்சியினர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்பார்த்தது போலவே, காங்., தலைமையிலான 'இண்டி' கூட்டணியினர் எதிர்த்தனர். ஊழலற்ற ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல வழக்குகளை முன் உதாரணமாக சொல்லலாம். டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறை சென்ற ஆம் ஆத்மி தலைவரும், அப்போதைய முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட போது, அவர் பதவி விலக வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியது. இது, தொடர்பான மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சிறையில் இருந்தபடியே, அரசு அலுவல்களை கெஜ்ரிவால் கவனித்தார். ஊழல் வழக்கில் கைதான அப்போதைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் சிறையில் இருந்த போது பதவியில் இருந்தனர். கடந்தாண்டு அமலாக்கத் துறையால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சிறை சென்றபோது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னாளில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. தமிழகத்தில், ஊழல் வழக்கில் சிக்கிய தி.மு.க.,வின் செந்தில் பாலாஜிக்கு, ஜாமின் கிடைத்த மறுநாளே மீண்டும் அமைச்சரானார்; நீதிமன்ற தலையீட்டுக்கு பின் பதவியை ராஜினாமா செய்தார். இதுபோன்ற வழக்குகளை கருத்தில் கொண்டே, பதவி பறிப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது, பார்லி., கூட்டுக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. பரிந்துரைகளை விரைந்து வழங்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அடுத்த கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற பா-.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு நடுவே, இந்த மசோதாவை நிறைவேற்றுவது பா.ஜ.,வுக்கு பெரும் சவாலாக உள்ளது. மசோதாவின் விதிகள் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து, மாநில அரசுகளை சீர்குலைக்க பயன்படுத்தப்படலாம் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இந்த அரசியல் சாசன திருத்த மசோதாவை நிறைவேற்ற, இரு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது. மொத்தம், 542 உறுப்பினர்கள் உடைய லோக்சபாவில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்பது 361 ஆகும். ஆனால், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு லோக்சபாவில், 293 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 68 பேரின் ஆதரவை பெறுவது, அந்த கூட்டணிக்கு எளிதாக இருக்காது. அதேபோல், ராஜ்யசபாவில் மொத்தம் 239 உறுப்பினர்கள் உள்ள நிலையில், 160 பேரின் ஆதரவு அவசியம். தே.ஜ., கூட்டணிக்கு 132 பேர் ஆதரவு உள்ளது. ஆகையால், அங்கும் பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ., உள்ளது. பலகட்ட போராட்ட ங்களை தாண்டி பதவி பறிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானால், ஊழல் இல்லா பாரதம் உருவாகும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. யார் மீது எவ்வளவு வழக்கு? ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு குழு இணைந்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 30 மாநில முதல்வர்களின் தேர்தல் வேட்பு மனுக்களை ஆய்வு செய்தனர். அந்த தரவுகளின்படி, 12 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது. 10 பேர் மீது கொலை முயற்சி, கடத்தல், ஊழல் உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலை வகிக்கிறார். அவர் மீது மட்டும், 89 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். அவர் மீது, 47 வழக்குகள் உள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது 19, கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது 13, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது 5 வழக்குகள் உள்ளன. மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மீது தலா 4 வழக்குகள் உள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது இரண்டு வழக்குகளும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மஜி, சிக்கிம் முதல்வர் பி.எஸ்.தமங் ஆகியோர் மீது தலா ஒரு வழக்கும் பதிவாகி உள்ளன.- நமது சிறப்பு நிருபர் -