மேலும் செய்திகள்
வாக்காளரை ஈர்க்க கட்சிகள் ஆயத்தம்
04-Aug-2025
பீஹார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமாருடன் இணைந்து தே.ஜ., கூட்டணியை வலுப்படுத்தி இருக்கிறது பா.ஜ., எனினும், பிளான் 'பி' என்ற திட்டத்தையும் கையில் வைத்துள்ளது. அது தான் ஹிந்துத்துவா எனும் துருப்புச் சீட்டு. பீஹாரை பொறுத்தவரை மத அரசியல் எடுபடாது. காரணம், அங்கு ஜாதி ரீதியிலான பிரிவுகள் மிக அதிகம். மத அரசியல் இம்மாநிலத்தில் பெரும்பாலும் ஆட்சி நடத்திய கட்சிகள் எதுவென பார்த்தால் ஒன்று சோஷலிஸ கட்சி, மற்றொன்று காங்கிரஸ். 1992ல் பாபர் மசூதி இடிப்புக்குப் பின், 1995ம் ஆண்டில் சட்டசபை தேர்தலை சந்தித்தது பீஹார். அப்போது நாடு முழுதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற உணர்வெழுச்சி பொங்கி இருந்தது. இருந்தாலும் மொத்தம் உள்ள 324 தொகுதிகளில் 41 சீட்களில் மட்டுமே பா.ஜ., வெற்றி பெற்றிருந்தது. இத்தனைக்கும் அப்போது பீஹாரில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்படவில்லை. 167 தொகுதிகளை வென்று, இங்கு மத அரசியல் எடுபடாது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார் ஜனதா தள தலைமையின் கீழ் போட்டியிட்ட லாலு பிரசாத் யாதவ். அப்போது சமதா கட்சியில் இருந்த நிதிஷ் குமார் ஒற்றை படையில் தான் வெற்றி பெற்றிருந்தார். மத ரீதியாக அல்லாமல் ஜாதிய கட்டமைப்புக்குள் மக்கள் முடங்கி கிடந்ததே இதற்கு காரணமாக பார்க்கப்பட்டது. இதனை நன்கு உணர்ந்திருக்கும் அமித் ஷா, ஜாதிய கட்டமைப்புகளை உடைத்து, அனைவரையும் ஹிந்துக்கள் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, ஓட்டுகளை சிதறாமல் பெற வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அதற்காக வகுக்கப்பட்டது தான் இந்த பிளான் 'பி'. பீஹார் சட்டசபை தேர்தலையும், அம்மாநிலத்துக்கு ராமாயணத்துடன் உள்ள தொடர்பையும் புதுப்பித்து, வெற்றி பெற பா.ஜ., காய் நகர்த்தி வருகிறது. இதற்காகவே சீதா பிறந்த இடமாக கருதப்படும் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள புனவ்ரா தாமில் சீதா தேவிக்கு பிரமாண்ட கோவில் கட்ட முடிவெடுத்துள்ளது. அதற்காக கடந்த 8ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல்லும் நாட்டி இருக்கிறார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது போல, 882 கோடி ரூபாயில் மிக பிரமாண்டமாக இக்கோவில் அமைகிறது. சீதாமர்ஹியில் பிறந்த சீதா, பின்னர் நேபாள மன்னர் ஜனகரின் மகளாக, ஜனக்புரியில் வளர்ந்ததாக ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஜனகரின் மகள் என்பதால், ஜானகி என்ற பெயரிலும் சீதா தேவி அழைக்கப்பட்டார். எனவே, அயோத்தியில் இருந்து நேபாளத்தின் ஜனக்புரி வரை ராமாயண இதிகாசத்தை தொடர்பு படுத்தவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது. வியூகம் அயோத்தியில் இருந்து சீதாமர்ஹி வரையிலான இந்த திட்டத்திற்கு ராம் - ஜானகி பாதை என்ற பெயரையும் பா.ஜ., சூட்டியிருக்கிறது. 'சீதா தேவி கோவில் கட்ட மட்டுமல்ல, பீஹாரில் கட்சியை விஸ்தரிக்கவும், பா.ஜ., பலமாக வேரூன்றுவதற்கான அடிக்கல்லையும் அமித் ஷா நாட்டியுள்ளார்' என்கிறார் அரசியல் வல்லுநரான அஜய் குமார். 'ஜாதிய ரீதியில் சிதறி கிடக்கும் ஹிந்துக்களை ஒன்றிணைத்து, அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவே பா.ஜ., சீதா கோவில் கட்டும் திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது' என, கூறுகிறார் அஜய் குமார். பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து வியூகத்தையும் பா.ஜ., ஏற்கனவே வகுத்து விட்டது. தன் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மட்டுமே இதுவரை வெளிப்படுத்த வில்லை. சீதா கோவில் திட்டம் கைகொடுத்தால், அதிக இடங்களில் வெற்றி வசமாகும். அப்போது பா.ஜ., தீர்மானிப்பவரே முதல்வர் -- நமது சிறப்பு நிருபர் - .
04-Aug-2025