உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நாடார் ஓட்டுகளை குறிவைக்கிறது பா.ஜ.,; தமிழிசை மத்திய அமைச்சராக வாய்ப்பு?

நாடார் ஓட்டுகளை குறிவைக்கிறது பா.ஜ.,; தமிழிசை மத்திய அமைச்சராக வாய்ப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக பா.ஜ.,வில் உட்கட்சித் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இம்மாத இறுதிக்குள் மாநிலத் தலைவர் வரை தேர்வு செய்ய வேண்டும். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும், புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களுக்கான கவர்னராகவும் இருந்த தமிழிசையை டில்லிக்கு வருமாறு, கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது; அதன்படி, அவர் கட்சியின் தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் சிலரை சந்தித்துள்ளார்.

நம்பிக்கை

நாடார் இன பிரதிநிதி ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க, பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளதாகவும், அதையடுத்தே, அவர் டில்லி சென்று, கட்சியின் முக்கியத் தலைவர்களை சந்தித்ததாகவும், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுகுறித்து, தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தைப் பொறுத்தவரை, பிரதான ஜாதியைச் சேர்ந்தோருக்கெல்லாம் முக்கியப் பொறுப்புகள் அளிப்பதன் வாயிலாக, அவ்வினத்தைச் சேர்ந்தோர் மத்தியில் கட்சியை வேகமாக வளர்த்தெடுப்பதோடு, அவ்வின மக்கள் ஓட்டுகளை எளிதாக பெற முடியும் என, பா.ஜ., தரப்பில் முழுமையாக நம்பப்படுகிறது. அந்த அடிப்படையில், தமிழகத்தின் பிரதான ஜாதியான கவுண்டர் இனத்தைச் சேர்ந்த அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பதவியும், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கவர்னர் பொறுப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது. பட்டியல் இன ஓட்டு களை குறிவைத்தே, முன்னாள் மாநிலத் தலைவர் எல்.முருகன், நீலகிரியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பின்பும், அவரை மத்திய அமைச்சராக்கி உள்ளனர். அண்ணாமலை கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதால், அவருக்கு இரண்டாவது முறையும் தலைவர் பதவி கொடுப்பது என, மேலிடத்தில் முடிவெடுத்துள்ளனர். அதனால், தென்மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்து நாடார் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் பெண் என்பதாலும், ஏற்கனவே கவர்னராக இருந்தவர் என்பதாலும், தமிழிசைக்கு வாய்ப்பு வழங்க, கட்சி மேலிடத்தில் ஆலோசிப்பதாக தெரிகிறது. ஒருவேளை, தமிழிசை இல்லாதபட்சத்தில், 'பிரிக்ஸ்' நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கிக்கான இந்திய மண்டல இயக்குநர் ஜெனரலாக இருக்கும் ஜெகதீசப்பாண்டியன், பீஹாரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும் லண்டனில் இந்தியத் துாதராகவும் இருந்த ராஜன், 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் சிவன், தமிழகத்தில் இருந்து பிரதமருக்கு அரசியல் புள்ளிவிபரங்களை அளித்து வரும் நபர் உள்ளிட்டோரில் ஒருவரை, மத்திய அமைச்சராக்கவும் ஆலோசனை நடக்கிறது.

ஆலோசனை

இவர்கள் தவிர, பிரதமர் அலுவலகத்தோடு தொடர்பில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நாடார் இனப் பிரதிநிதிகளாக இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட சிலருடைய பெயர்களும் மேலிடத்தின் ஆலோசனையில் இருக்கின்றன. கடந்த லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி, நெல்லை, தேனி, துாத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல தொகுதிகளில், பா.ஜ., குறிப்பிடத்தக்க ஓட்டுகளை பெற்றிருக்கிறது. அதற்கு, ஹிந்து நாடார் ஓட்டுகளே காரணம். இந்த விபரங்களை மத்திய உளவுத்துறையினர், பா.ஜ., மேலிடத்துக்கு அளித்துள்ளனர். அதனால், பா.ஜ.,வுக்கு விசுவாசமாக ஓட்டளித்து வரும் ஹிந்து நாடார் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, மத்திய அமைச்சரவையில் இடம் அளிப்பதன் வாயிலாக, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு பயனுள்ளதாக இருக்கும் என முடிவெடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மோகனசுந்தரம் லண்டன்
ஜன 04, 2025 19:31

இந்த அம்மாவை தமிழகத்திலிருந்து கிளப்பி வேறு எங்கேயாவது கொண்டு போய் தள்ளினால் நன்றாக இருக்கும்.


அப்பாவி
ஜன 04, 2025 14:37

இப்பத்தான் சாதியை வெச்சு நாட்டை சீர்குலைக்க முயற்சின்னு ஜீ பேசுனாரு. அது வேற வாய். இது வேற நாடார் வாய்.


Svs Yaadum oore
ஜன 04, 2025 12:20

தேசியமும் தெய்வீகமும் இருகண்கள் .....ஒழுக்கத்தை போதித்த தமிழக தலைவர்கள் பின்னால் தமிழன் செல்லவில்லை ......ஒழுங்கீனம் தனி மனித ஒழுக்கம் இல்லாத மனிதர்கள் பின்னால் சென்றதால்தான் இப்பொது மிகவும் இழிந்த நிலைமையில் தமிழ் நாடு ...


அஜய் சென்னை
ஜன 04, 2025 10:07

தமிழிசை வை மீண்டும் கவர்னர் பொறுப்பை கொடுத்து அதில் கவனம் செலுத்த சொன்னதால் தமிழ்க் பாஜக விற்கு நல்லது. இல்லை என்றால் வேறு மாநிலத்தில் ஒரு முக்கிய பொறுப்பை கொடுத்து அதை பார்க்க சொல்லுவது நல்லது.


குமரி குருவி
ஜன 04, 2025 08:56

ஆளுநர் பதவியை விட மந்திரி பதவி உயர்வா...


pv, முத்தூர்
ஜன 04, 2025 07:35

ஜாதிகள் இல்லையடி பாப்பா, நம்புங்க.


Svs Yaadum oore
ஜன 04, 2025 12:27

தவறு ஜாதியில் கிடையாது ..ஜாதி வீடு வரைதான் ..இங்கு ஜாதி பார்த்து வோட்டு போடுபவர்கள் எல்லாம் அடுத்த ஜாதிக்கு எதிரிகள் என்பது கிடையாது ....பிரச்சனை ஜாதியை மூலதனமாக வைத்து கொள்ளையடிப்பதும் அதே ஜாதி மக்களை சுரண்டுபவர்கள்தான் ...


கிஜன்
ஜன 04, 2025 05:42

கன்னியாகுமாரில பொன்னாரை யார் தோற்கடித்தார்களாம் ? விசுவாசம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியுமா .... தேசியமும் தெய்வீகமும் இருகண்கள் என வாழும் தேவரினம் என்ன தவறு செய்தது ?


மணியன்
ஜன 04, 2025 07:57

தேவரினத்துக்கும் முக்கியத்துவம் தருவார்கள்.


முக்கிய வீடியோ